உலகம்

விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு பலியான நபர்: விமான சேவை பாதிப்பு

Published On 2025-07-08 21:00 IST   |   Update On 2025-07-08 21:00:00 IST
  • மிலன் விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டார்.
  • இதில் அவர் பரிதாபமாக இறந்தது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரோம்:

இத்தாலியின் மிலன் நகரில் பெர்கமோ விமான நிலையம் அமைந்துள்ளது. இன்று காலை இந்த விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக, அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

வோலோடியா விமான நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ-319 என்ற விமானம் ஸ்பெயினின் அஸ்டூரியாஸ் செல்ல விமான ஓடுதளத்தில் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது அதனருகே ஓடிக்கொண்டிருந்த நபர் விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டார் என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வோலோடியா விமான நிறுவனம் எக்ஸ் வலைதளப் பக்கத்தில், உயிரிழந்தது பயணியோ, விமான ஊழியரோ அல்ல. 154 பயணிகளும் 6 பணியாளர்களும் விமானத்தில் பாதுகாப்பாக இருக்கின்றனர் என பதிவிட்டது.

இச்சம்பவத்தால் அந்த விமான நிலையத்தில் 9 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. 6 விமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. எட்டு விமானங்கள் நிறுத்தப்பட்டது. மதியத்துக்கு மேல் விமானங்கள் இயக்கப்பட்டன. விமான இன்ஜினால் ஒருவர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News