கத்தார் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்: மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்
- இஸ்ரேல்-ஹமாஸ் போர் 2 ஆண்டைக் கடந்தும் நடந்து வருகிறது.
- காசாவில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தோஹா:
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023, அக்டோபர் 7-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதில் 1,195 பேர் கொல்லப்பட்டனர். பலரை பிணைக்கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழு கடத்திச் சென்றது.
இதனை தொடர்ந்து காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
சுமார் 2 ஆண்டாக நடந்து வரும் இந்தப் போரில் காசாவில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிணைக்கைதிகள் பலர் ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கையிலும் இஸ்ரேல் மீட்டுள்ளது. பிணைக்கைதிகளில் சிலர் காசா முனையில் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்களும் இஸ்ரேல் படையினரால் மீட்கப்பட்டன. ஆனால், இன்னும் 48 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் காசா முனையில் ஹமாஸ் பிடியில் உள்ளனர்.
இதற்கிடையே, இந்தப் போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு கத்தார் ஆதரவு அளித்து வருகிறது. கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கத்தாரில் இருந்தவாறு காசா போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை குறித்து கத்தார் அரசு மூலம் இஸ்ரேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கத்தார் மீது இஸ்ரேல் இன்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. தோஹாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.
பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் அந்த அலுவலகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.