உலகம்

காசாவில் ஒரே நாளில் 104 பேரை கொன்று குவித்த இஸ்ரேல்.. ராஃபாவில் உணவுக்காக காத்திருந்த 37 பேர் பலி

Published On 2025-07-20 08:01 IST   |   Update On 2025-07-20 08:01:00 IST
  • உணவுக்காகக் காத்திருப்பவர்கள் மீது துப்பாக்கிச்சூடு, பீரங்கி மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் படுகொலைகளை செய்து வருகிறது.
  • அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சில நாட்களுக்கு ஒருமுறை ஏதாவது சாப்பிடுகிறார்கள்.

நேற்று (ஜூலை 19) ஒரே நாளில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் 104 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் 37 பேர் ராஃபாவில் உள்ள உணவு விநியோக மையத்தில் உணவுக்காக காத்திருந்தபோது கொல்லப்பட்டனர்.

இதன்மூலம் காசா போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,765 ஐ எட்டியுள்ளது. 1,40,485 பேர் காயமடைந்தனர்.

மற்ற அனைத்து வழிகளும் மூடப்பட்டு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் நடத்தப்படும் காசா மனிதாபிமான அறக்கட்டளை மூலம் உணவு விநியோகம் செய்யப்படுகிறது.

அங்கு உணவுக்காகக் காத்திருப்பவர்கள் மீது துப்பாக்கிச்சூடு, பீரங்கி மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் படுகொலைகளை செய்து வருகிறது.

ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பட்டினியின் விளிம்பில் இருப்பதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சில நாட்களுக்கு ஒருமுறை ஏதாவது சாப்பிடுகிறார்கள். சுத்தமான தண்ணீர் இல்லாமல் தொற்று நோய்கள் பரவி வேகமாக பரவி வருகின்றன.

இதற்கிடையே நேற்று, இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியில், காசாவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளை எழுதினர். அக்டோபர் 2023க்குப் பிறகு காசாவில் தேர்வுகள் நடதப்பட்டது இதுவே முதல் முறை. 1,500 மாணவர்கள் வரை தேர்வு எழுதியதாக தெரிகிறது.

காசா கல்வித் துறை இந்தத் தேர்வு சிறப்பு மென்பொருளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாக தெரிவித்தது.

பல்கலைக்கழகப் படிப்பு கனவை நோக்கிய முதல் படி இந்த தேர்வு. இணையம் மற்றும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் கிடைக்கக்கூடிய இடங்களில் தேர்வை எழுதினர்.  

Tags:    

Similar News