உலகம்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு

Published On 2024-04-18 08:55 GMT   |   Update On 2024-04-18 08:57 GMT
  • எரிமலையின் ஒரு பகுதி கடலில் சரிந்து சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.
  • சுலவேசி தீவில் இருந்து பொதுமக்கள் மனடோ நகருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள ருவாங் தீவில் எரிமலை வெடித்து சிதறி வருகிறது. இந்த எரிமலையானது நள்ளிரவில் இருந்து 5 முறை பயங்கரமாக வெடித்தது. அதில் இருந்து எரிமலை குழம்புகள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றன. பல நாட்களாக சாம்பலை வெளியேற்றி வந்த நிலையில் தற்போது வெடித்து சிதறியுள்ளது.

ஆயிரக்கணக்கான அடி உயரத்திற்கு சாம்பல் படிந்திருக்கிறது. எரிமலை வெடிப்பையடுத்து சுமார் 11 ஆயிரம் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 2,378 அடி உயரமுள்ள ருவாங் எரிமலையில் இருந்து குறைந்தது 6 கி.மீ. தொலைவில் இருக்குமாறு சுற்றுலா பயணிகள், பொதுமக்களை அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.

மேலும் எரிமலையின் ஒரு பகுதி கடலில் சரிந்து சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களை தொடர்ந்து ருவாங் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

சுலவேசி தீவில் இருந்து பொதுமக்கள் மனடோ நகருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் அனக் க்ரகடாவ் எரிமலையின் வெடிப்பால் சுமத்ரா மற்றும் ஜாவா கடற்கரையில் சுனாமியை ஏற்படுத்தியது. அதன்பின் மலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து 430 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News