உலகம்

21 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை: 'திருமதி உலக அழகி' பட்டத்தை வென்றார் இந்திய பெண்

Published On 2022-12-19 02:32 GMT   |   Update On 2022-12-19 02:32 GMT
  • இந்தியா சார்பில், சர்கம் கவுசல் என்ற 32 வயது பெண், கலந்து கொண்டார்.
  • சர்கம் கவுசல், காஷ்மீரின் ஜம்முவை பூர்வீகமாக கொண்டவர்.

வாஷிங்டன் :

திருமணமான பெண்களில் சிறந்த அழகியை தேர்ந்தெடுப்பதற்காக, 'திருமதி உலக அழகி' (மிஸஸ் வேர்ல்டு) என்ற போட்டி, கடந்த 1984-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான இப்போட்டி, அமெரிக்காவில் வெஸ்ட்கேட் லாஸ் வேகாஸ் ரிசார்ட் என்னும் சொகுசு விடுதியில் நடந்தது. 63 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.

இந்தியா சார்பில், சர்கம் கவுசல் என்ற 32 வயது பெண், கலந்து கொண்டார். நேற்று இறுதிச்சுற்று போட்டி நடந்தது.

அதில், சர்கம் கவுசல் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு சென்ற ஆண்டுக்கான திருமதி உலக அழகி ஷாலின் போர்டு, கிரீடம் சூட்டினார். அப்போது, அரங்கம் அதிர கைதட்டல் எழுந்தது.

2-வது இடத்தை பாலினேசியா நாட்டு பெண்ணும், 3-வது இடத்தை கனடா அழகியும் பிடித்தனர்.

கடந்த 2001-ம் ஆண்டு திருமதி உலக அழகி பட்டத்தை இந்திய பெண் அதிதி கவுரிகர் வென்றார். 21 ஆண்டுகள் கழித்து, இந்த பட்டம் மீண்டும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

தான் வெற்றி பெற்றதை சர்கம் கவுசல் சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்தார். ''21 ஆண்டுகளுக்கு பிறகு நமக்கு கிரீடம் கிடைத்துள்ளது. எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்தியாவை நேசிக்கிறேன். உலகத்தை நேசிக்கிறேன்'' என்று அவர் கூறியுள்ளார்.

2001-ம் ஆண்டில் திருமதி உலக அழகி போட்டியில் வென்ற அதிதி கவுரிகரும் சர்கம் கவுசலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்கம் கவுசல், காஷ்மீரின் ஜம்முவை பூர்வீகமாக கொண்டவர். அவருடைய கணவர் அடி கவுசல், இந்திய கடற்படை அதிகாரி ஆவார். இவர்களுக்கு 2018-ம் ஆண்டு திருமணம் ஆனது.

Tags:    

Similar News