அமெரிக்காவில் இந்திய பெண் கொலை.. தப்பி வந்து தமிழகத்தில் பதுங்கிய முன்னாள் காதலன் கைது
- மேரிலாந்தில் எலிகாட் சிட்டியில் டேட்டா அனலிஸ்ட் ஆக பணியாற்றி வந்தார்.
- அர்ஜுன் சர்மாவை கைது செய்ய அமெரிக்க போலீசார் இன்டர்போல் உதவியை நாடினர்.
அமெரிக்காவில் இந்திய பெண் தனது முன்னாள் காதலனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது
உயிரிழந்த பெண் 27 வயதுடைய நிகிதா கோடிஷாலா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மேரிலாந்தில் எலிகாட் சிட்டியில் டேட்டா அனலிஸ்ட் ஆக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நிகிதாவைத் தானே கொலை செய்துவிட்டு, டிசம்பர் 31 முதல் காணாமல் போய்விட்டதாக அவரது முன்னாள் காதலன் அர்ஜுன் சர்மா (26) போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்த உடனே போலீசாருக்குச் சந்தேகம் வராத வகையில் அர்ஜுன் இந்தியாவுக்குத் தப்பி வந்துள்ளார்.
போலீசார் நடத்திய விசாரணையில், ஜனவரி 3-ம் தேதி அன்று அவரது முன்னாள் காதலன் அர்ஜுன் சர்மா (26) குடியிருப்பில் நிகிதாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
அவரது உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அர்ஜுன் சர்மாவே, கொதிஷாலாவை கடுமையாக தாக்கி, பல்வேறு முறை கத்தியால் குத்திக் கொன்றதாக போலீசார் கண்டறிந்தனர்.
அர்ஜுன் சர்மாவை கைது செய்ய அமெரிக்க போலீசார் இன்டர்போல் உதவியை நாடினர். இந்நிலையில் தமிழகத்தில் பதுங்கியிருந்த அர்ஜுன் சர்மாவை டிராக் செய்து இன்டர்போல் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்தும் பணிகள் நடந்து வருகின்றன.