உலகம்

ஏமனில் கேரள நர்ஸ்க்கு வருகிற 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றம்..!

Published On 2025-07-08 21:04 IST   |   Update On 2025-07-08 21:04:00 IST
  • பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்திருந்த பார்ட்னருக்கு மயக்க மருந்து செலுத்தியுள்ளார்.
  • கூடுதல் டோஸ் செலுத்தியதால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு.

இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் நர்ஸ் வேலைக்கு படித்தவர். கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாடு சென்று பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். இறுதியாக கிளினிக் தொடங்க முடிவு செய்தார்.

ஏமன் நாட்டின் விதிமுறைப்படி தொழில் தொடங்க வேண்டுமென்றால் அந்த நாட்டின் ஒருவர் பார்ட்னராக இருக்க வேண்டும். அதனடிப்படையில் தலால் அப்டோ மெஹ்தி என்பருடன் கடந்த 2014 ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டு, பார்ட்னராக சேர்த்துள்ளார்.

நாட்கள் செல்ல செல்ல மெஹ்தி, நிமிஷா பிரியாவை மிரட்ட தொடங்கியுள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்க மெஹ்தி கடந்த 2016ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் விடுதலை ஆகி வெளியே வந்த பின்னரும் தொடர்ந்து மிரட்டியுள்ளார்.

மெஹ்தி பறிமுதல் செய்து வைத்திருந்த பாஸ்போர்ட்டை மீட்க, அவருக்கு மயக்க மருந்து செலுத்தியதாக தெரிகிறது. கூடுதல் டோஸ் செலுத்தியதால் மெஹ்தி உயிரிழந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பின்னர் ஏமனில் இருந்து வெளியேற முயற்சித்தபோது, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

பின்னர 2023ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. இந்த நிலையில் வருகிற 16 ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை தொடர்ந்து இந்த விசயம் தொடர்பாக உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், ஏமன் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், முடிந்த அளவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News