உலகம்

மலேசியாவில் கியாஸ் குழாய் வெடித்து பயங்கர தீ விபத்து- 100 பேர் உடல் கருகினர்

Published On 2025-04-02 10:12 IST   |   Update On 2025-04-02 10:12:00 IST
  • எரிவாயு குழாய் திடீரென தீப்பிடித்தது. பின்னர் பயங்கர சத்தத்துடன் அந்த குழாய் வெடித்து சிதறியது.
  • முன்னெச்சரிக்கையாக அங்குள்ள 3 கியாஸ் நிலையங்களும் மூடப்பட்டன.

கோலாலம்பூர்:

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் புத்ரா ஹைட்ஸ் பகுதியில் கியாஸ் நிலையம் அமைந்துள்ளது. அங்கு தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாசின் எரிவாயு குழாய் மூலம் கியாஸ் கொண்டு செல்லப்படுகிறது.

இந்தநிலையில் அங்குள்ள எரிவாயு குழாய் திடீரென தீப்பிடித்தது. பின்னர் பயங்கர சத்தத்துடன் அந்த குழாய் வெடித்து சிதறியது.

அப்போது சுமார் 300 அடி உயரத்துக்கு தீக்குழம்பு மேலெழும்பியது. இது பார்ப்பதற்கு எரிமலை வெடித்து சிதறியது போல இருந்தது. தொடர்ந்து பரவிய தீயால் அங்கு சுமார் 50 வீடுகள் எரிந்து நாசமாகின.

எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதேபோல் முன்னெச்சரிக்கையாக அங்குள்ள 3 கியாஸ் நிலையங்களும் மூடப்பட்டன.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். இந்த பணியில் ஏராளமான ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. இதனால் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அதேசமயம் இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேசிய எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News