உலகம்

போப் 16-ம் பெனடிக்ட்

முன்னாள் போப்பாண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல் நல்லடக்கம்

Published On 2023-01-05 23:13 GMT   |   Update On 2023-01-05 23:13 GMT
  • வாடிகனில் முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்டின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
  • பதவியில் உள்ள போப்பாண்டவர், தனக்கு முந்தைய போப்பாண்டவரின் இறுதிச்சடங்கை நடத்தியது இது முதல் முறை.

வாடிகன் சிட்டி:

உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப்பாண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல்நலக் குறைவால் கடந்த 31-ம் தேதி மரணம் அடைந்தார். போப்பாண்டவர் 16-ம் பெனடிக்ட் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து பதவி விலகிய அவர் வாடிகனில் ஓய்வில் இருந்துவந்தார். அவருக்கு பின் போப்பாண்டவர் பிரான்சிஸ் அந்தப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையே, கடந்த மாதம் 28-ம் தேதி போப்பாண்டவர் 16-ம் பெனடிக்டின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தற்போதைய போப்பாண்டவர் பிரான்சிஸ் தெரிவித்தார். சிகிச்சை பலன் இன்றி கடந்த 31-ம் தேதி போப்பாண்டவர் 16-ம் பெனடிக்ட் மரணம் அடைந்தார். அவரது உடல் வாடிகன் அரண்மனையில் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், முன்னாள் போப்பாண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல் அடங்கிய பேழையை புனித பீட்டர் சதுக்கத்தில் வைத்து இறுதி பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உலகமெங்கும் இருந்து கத்தோலிக்க பாதிரியார்கள், பேராயர்கள், கார்டினல்கள், கன்னியாஸ்திரிகள் கலந்துகொண்டனர்.

மூட்டு வலியால் அவதியுற்று வரும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சக்கர நாற்காலியில் வந்து, இந்த இறுதி பிரார்த்தனையை நடத்தினார்.

பதவியில் உள்ள போப் ஆண்டவர் ஒருவர், தனக்கு முந்தைய போப் ஆண்டவரின் இறுதிச் சடங்கை நடத்தியது வரலாற்றில் இதுவே முதல் முறை. பிரார்த்தனைக் கூட்டத்தின் முடிவில் முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல் வைக்கப்பட்டிருந்த பேழை மீது போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனித நீர் தெளித்தார். இறுதியாக போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்டின் உடல், அவருக்கு முந்தைய போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பால் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்த புனித பீட்டர் தேவாலயத்தின் அடியில் அமைந்துள்ள 'வாடிகன் கிரோட்டஸ்' என்று அழைக்கப்படுகிற இடத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு மூன்றடுக்கு பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News