உலகம்

பூட்டோ தூக்கு தண்டனை வழக்கு - விசாரணை முறையாக நடக்கவில்லை: உச்ச நீதிமன்றம்

Published On 2024-03-06 13:48 GMT   |   Update On 2024-03-06 13:48 GMT
  • உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், பூட்டோவிற்கு மரண தண்டனை விதித்தது
  • தவறுகளை ஒப்பு கொள்ளா விட்டால் நாம் முன்னேற முடியாது என்றார் தலைமை நீதிபதி

பாகிஸ்தானில், 1971லிருந்து 1973 வரை அதிபராகவும், 1973லிருந்து 1977 வரை பிரதமராகவும் இருந்தவர் சுல்ஃபிகர் அலி பூட்டோ (Zulfikar Ali Bhutto).

1977ல் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவை பதவியில் இருந்து ராணுவ புரட்சி மூலம் தூக்கி எறிந்து பதவிக்கு வந்தார் ஜெனரல் ஜியா-உல் ஹக் (General Zia-ul-Haq).

1979ல் ஜியாவின் ஆட்சியின் போது, அகமது ரெசா கசூரி (Ahmed Reza Kasuri) என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் சுல்ஃபிகர் அலி பூட்டோவிற்கு மரண தண்டனை விதித்தது.

ராவல்பிண்டியில் சுல்ஃபிகர் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என வழக்கு தொடரப்பட்டு பல வருடங்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இன்று, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், "சுல்பிகர் அலி பூட்டோவின் வழக்கு நியாயமான முறையில் நடக்கவில்லை" என தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காசி ஃபேஸ் இசா (Qazi Faez Isa) தலைமையிலான 9-நபர் பெஞ்ச் அளித்துள்ள இந்த தீர்ப்பில், "லாகூர் உயர் நீதிமன்றமும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றமும் முறையான விசாரணை பெற ஒவ்வொரு தனி நபருக்கும் உள்ள மனித உரிமையை பூட்டோவிற்கு வழங்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. நமது முந்தைய தவறுகளை ஒப்பு கொள்ளா விட்டால் நம்மை திருத்தி கொண்டு நாம் முன்னேற முடியாது" என கூறியுள்ளது.

இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள சுல்ஃபிகர் அலி பூட்டோவின் பேரனும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (Pakistan People's Party) தலைவருமான பிலாவல் பூட்டோ ஜர்தாரி (Bilawal Bhutto-Zardari), "3 தலைமுறைகளாக இந்த தீர்ப்பிற்காக காத்திருந்தோம்" என கூறினார்.

Tags:    

Similar News