வங்கதேச முன்னாள் பிரதமர் மிகவும் கவலைக்கிடம்
- டாக்காவில் தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13ம் தேதி கலிதா ஜியா அனுமதிக்கப்பட்டார்.
- அவருக்கு சிறப்பு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.
டாக்கா:
அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சிறப்பு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே நீரழிவு, கல்லீரல், சிறுநீரக பிரச்சனைகள், இதய கோளாறு போன்ற உடல்நலப் பிரச்சனைகளால் அவர் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் டாக்டர்கள் நேற்று தெரிவித்தனர். அவரை மேல் சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்குமாறு அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அடுத்த ஆண்டு வங்கதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், கலிதா ஜியாவின் உடல்நலப் பாதிப்பு அக்கட்சிக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.
கலிதா ஜியா கடந்த 1991-96 மற்றும் 2001-06 என இரு முறை வங்கதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.