உலகம்

சிறையில் உயிரிழந்தாரா இம்ரான் கான்?.. பாகிஸ்தானில் பரபரப்பு - அறிக்கை வெளியிட்ட நிர்வாகம்

Published On 2025-11-27 19:51 IST   |   Update On 2025-11-27 21:09:00 IST
  • இம்ரான்கான் சிறையில் வைத்து கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல் பாகிஸ்தானில் பரவியது.
  • இம்ரான்கான் சகோதரிகள் நோரீன் கான், அலீமா கான், உஸ்மா கான் ஆகியோர் சிறைக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, கடந்த 3 வாரமாக இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரிகள் மற்றும் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி நிர்வாகிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் இம்ரான்கான் சிறையில் வைத்து கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல் பாகிஸ்தானில் பரவியது.

இம்ரான்கான் சகோதரிகள் நோரீன் கான், அலீமா கான், உஸ்மா கான் ஆகியோர் நேற்று அடியாலா சிறைக்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள் தகவலறிந்து ஏராளமான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் இதுதொடர்பாக ராவல்பிண்டி அடியாலா சிறை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,"இம்ரான் கான் அடியாலா சிறையிலிருந்து மாற்றப்பட்டதாக வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவர் பூரண உடல்நலத்துடன் இருக்கிறார், அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் வழங்கப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) இந்த வதந்திகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. அரசாங்கம் உடனடியாக இந்த விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், உடனடியாக இம்ரானுடன் அவரது குடும்ப உறுப்பினர்களின் சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது. 

இதைத்தொடர்ந்து இம்ரான் கானை அவரது சகோதரிகள் சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

Tags:    

Similar News