உலகம்

பாகிஸ்தானில் பனி மூட்டம் காரணமாக பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 8 பேர் பலி

Published On 2022-12-19 18:06 IST   |   Update On 2022-12-19 18:06:00 IST
  • காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு பஞ்சாப் முதல்-மந்திரி பெர்வைஸ் எலாஹி உத்தரவு.
  • இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ராஜன்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்து நெடுஞ்சாலையில் கடும் மூடுபனியால் மூடப்பட்டிருந்தது. இதனால் சாலையில் எதிரில் வரும் வாகனங்கள் வருவதை கூட கணிக்கமுடியவில்லை.

இந்தநிலையில் எதிரெதிர் திசையில் இருந்து வந்த பஸ் ஒன்றொடொன்று மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.

ஒரு பஸ் பெஷாவரில் இருந்து கராச்சிக்கும், மற்றொரு பஸ் ராஜன்பூருக்குச் சென்று கொண்டிருந்தது. விபத்தில் காயடைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு பஞ்சாப் முதல்-மந்திரி பெர்வைஸ் எலாஹி உத்தரவிட்டுள்ளார்.பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களின் சில பகுதிகள் தற்போது அடர்ந்த பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அடர்ந்த பனிமூட்டம் காரணமாக சிந்து நெடுஞ்சாலையின் சில பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து மற்ற நெடுஞ்சாலைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அந்நாட்டு அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News