உலகம்

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக்குக்கு அதிக வாய்ப்பு- இன்று முதல் சுற்று வாக்குப்பதிவு

Published On 2022-07-13 15:06 GMT   |   Update On 2022-07-13 15:06 GMT
  • புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக் உள்பட 8 பேர் உள்ளனர்.
  • எம்.பி.க்கள் பலர் ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

லண்டன்:

பிரட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனுக்கு சொந்த கட்சி எம்.பி.க்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. கொரோனா விதி முறையை மீறி மது விருந்து நடத்தியது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சையில் சிக்கிய அவர், அரசாங்கத்தை திறமையுடன் நடத்தவில்லை என்று நிதி மந்திரியாக இருந்த ரிஷி சுனக் உள்ளிட்ட மூத்த மந்திரிகள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.

நெருக்கடி அதிகமானதால் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்தார். இதையடுத்து அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது.

புதிய பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 11 பேர் அறிவித்தனர். கடைசி நேரத்தில் போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷேப்ஸ், ரகுமான் சிஸ்டி, முன்னாள் சுகாதார மந்திரி சஜித் ஜாவித் ஆகியோர் விலகுவதாக அறிவித்த நிலையில், களத்தில் 8 பேர் உள்ளனர்.

இங்கிலாந்து அரசமைப்பு சட்டப்படி ஆளும் கட்சி தலைவர்தான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க முடியும். அதன்படி கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமராக பதவியேற்க உள்ளார். தலைவர் தேர்தல் இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது. அக்கட்சியின் 358 எம்.பி.க்கள் வாக்களிப்பாளர்கள். முதல் சுற்று தேர்தலில் 30 எம்.பி.க்களின் ஆதரவை பெற தவறும் வேட்பாளர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார். வெளியேற்றுதல் வாக்கெடுப்பில் வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறைத்து கொண்டே வந்து இறுதியில் 2 பேர் மட்டும் களத்தில் இருப்பார்கள்.

இறுதிச் சுற்று போட்டியிலும் இருவரில் ஒருவரை கட்சியின் 2 லட்சம் உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களித்து தேர்ந்தெடுப்பர். அவரே கட்சி தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு செய்யப்படுவார். முதல் சுற்று வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

தற்போது களத்தில் உள்ள 8 பேரில் ரிஷி சுனக்குக்கு அதிக வாய்ப்பு உள்ளது. அவருக்கு எம்.பி.க்களில் அதிக ஆதரவு இருப்பதால் அடுத்த பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

போட்டியில் இருந்து விலகிய கிராண்ட் ஷேப்ஸ், தனது ஆதரவை ரிஷி சுனக்குக்கு தெரிவித்துள்ளார். இதே போல் எம்.பி.க்கள் பலர் ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய பிரதமரின் பெயர் வருகிற செப்டம்பர் 5-ந்தேதி அறி விக்கப்படும்.

Tags:    

Similar News