உலகம்

100% வரி விதிப்பதாக அறிவிப்பு: அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் - சீனா

Published On 2025-10-12 12:19 IST   |   Update On 2025-10-12 12:19:00 IST
  • நவம்பர் முதல் சீன பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.
  • அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் என்று சீனா தெரிவித்து உள்ளது.

சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் சில மாதங்களுக்கு முன்பு 145 சதவீத வரியை விதித்தார். இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்கள் மீது சீனா 110 சதவீத வரி விதித்தது. இதையடுத்து இரு நாடுகள் இடையே வர்த்தக மோதல் ஏற்பட்டது.

பின்னர் அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்ததால் சீனா மீதான வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்தார். இதற்கிடையே வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் சீன பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் நேற்று அறிவித்தார்.

சீனா தனது அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதியில் புதிய கட்டுபாடுகளை விதித்ததையடுத்து அதிருப்தி அடைந்த டிரம்ப், மீண்டும் சீனா மீது கூடுதல் வரி விதிப்பதாக மிரட்டல் விடுத்து உள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் என்று சீனா தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக சீனாவின் வர்த்தக அமைச்சகம் கூறியதாவது:-

அதிக வரிகள் விதிப்பு என்ற அச்சுறுத்தல்கள் சீனாவுடன் இணைந்து செயல்பட சரியான வழி அல்ல. வர்த்தகப் போரில் எங்கள் நிலைப்பாடு நிலையானது. நாங்கள் வர்த்தக போரை விரும்பவில்லை. ஆனால் அதை பார்த்து நாங்கள் பயப்படவில்லை.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அந்நாட்டின் இரட்டை தரநிலைகளுக்கு ஒரு பொதுவான எடுத்துக்காட்டு ஆகும். இரு தரப்பினருக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் சூழலைக் கடுமையாகப் பாதித்துள்ளன.

கடந்த மாதம் முதல் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா பொருளாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அமெரிக்கா தனது தவறான நடைமுறைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும். அமெரிக்கா தவறான வழியில் செல்ல வலியுறுத்தினால், சீனா நிச்சயமாக அதன் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News