1,400 பேர் உயிரிழந்த அதே பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்.. ஆப்கானிஸ்தானில் தொடரும் சோகம்
- உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளனர்.
- பாகிஸ்தானை ஒட்டிய இப்பகுதியில் வீடுகள் அனைத்தும் மண்ணால் கட்டப்பட்டவை.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான குனார் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்தது 6.0, 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
பாகிஸ்தானை ஒட்டிய இப்பகுதியில் வீடுகள் அனைத்தும் மண்ணால் கட்டப்பட்டவை என்பதால் நிலநடுக்கத்தின் தாக்கத்தில் அவை இடிந்து விழுந்தன.
இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்து பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
மீட்டுப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஞாயிறு இரவு நிலநடுக்கம் ஏற்பட்ட அதே குனார் பகுதியை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை மீண்டும் நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிக்கைபடி, இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்ட அதே பகுதிகளில் இன்றும் நிலஅதிர்வுகள் உணரப்பட்டன.
குனார் மாகாணத்தின் பேரிடர் மேலாண்மைத் துறையின் செய்தித் தொடர்பாளர் எஹ்சானுல்லா எஹ்சான் ஊடகங்களிடம் பேசுகையில், .இந்த புதிய நிலக்காடுகத்தால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.