உலகம்

8 அடி 3 அங்குலம் தாடி வளர்த்த கனடா சீக்கியர்- தனது கின்னஸ் சாதனையை தானே முறியடித்தார்

Published On 2023-03-24 05:48 GMT   |   Update On 2023-03-24 05:48 GMT
  • தாடி என்பது சீக்கியர்களின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.
  • மூன்றாவது முறையாக சாதனைப் பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

சுவீடனை சேர்ந்த பிர்ஜெர் பெலாஸ் என்பவர் 5 அடி 9 அங்குலம் நீளத்துக்கு தாடி வளர்த்திருந்தார். இதுதான் ஏற்கனவே கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை கடந்த 2008-ல் ஆண்டு கனடாவில் வசிக்கும் சீக்கியர் சர்வன் சிங் முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்தார்.

அப்போது சர்வன் சிங் தாடியின் நீளம் 7 அடி 8 அங்குலமாக இருந்தது. அதன் பிறகு கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலியில் நடந்த சாதனை நிகழ்ச்சியில் அவரது தாடியை அளந்து பார்த்தனர். அப்போது அது 8 அடி 2.5 அங்குலமாக வளர்ந்து காணப்பட்டது.

இந்நிலையில் சர்வன் சிங் மீண்டும் தனது கின்னஸ் சாதனையை தானே முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரது தாடியை அளந்த போது அது 8 அடி 3 அங்குலமாக வளர்ந்து காணப்பட்டது. இதன் மூலம் தனது சாதனையை தானே மீண்டும் முறியடித்துள்ளார். மூன்றாவது முறையாக சாதனைப் பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளது என்று கின்னஸ் உலக சாதனை புதன்கிழமை மார்ச் 22, 2023 தெரிவித்துள்ளது.

அவரது தாடி இதற்கு முன்பு கருப்பாக காணப்பட்டது. ஆனால் தற்போது நரைத்த நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து சர்வன் சிங் கூறியதாவது:-

நான் 17 வயது முதல் தாடியை வளர்த்து வருகிறேன். இதுவரை ஒரு தடவை கூட தாடியை வெட்டியதில்லை. தாடி என்பது சீக்கியர்களின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். எனவே இந்த தாடியை கடவுளின் பரிசாக கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News