உலகம்

தென்ஆப்பிரிக்காவில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு

Published On 2025-10-14 02:45 IST   |   Update On 2025-10-14 07:11:00 IST
  • ஜிம்பாப்வே நோக்கி பேருந்து சென்றுகொண்டிருந்தது.
  • உயிரிழந்தவர்களில் 7 குழந்தைகள், 17 ஆண்கள் மற்றும் 18 பெண்கள் அடங்குவர் என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் செங்குத்தான மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கோர விபத்தில் குறைந்தது 42 பேர் உயிரிழந்தனர். மேலும் 49 பேர் காயமடைந்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில், தலைநகர் பிரிட்டோரியாவுக்கு வடக்கே சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லூயிஸ் டிரைகார்ட் நகரத்திற்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது.

ஜிம்பாப்வே நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த பேருந்தில் ஜிம்பாப்வே மற்றும் மாலாவியைச் சேர்ந்த நாட்டவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் என்று அரசு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 7 குழந்தைகள், 17 ஆண்கள் மற்றும் 18 பெண்கள் அடங்குவர் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

காயமடைந்த 49 பேரில் ஆறு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், 31 பேர் தீவிர காயங்களுடனும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    

Tags:    

Similar News