உலகம்
கோத்தபய ராஜபக்சே

இலங்கை அரசியல் கட்சிகளுக்கு கோத்தபய ராஜபக்சே அழைப்பு

Published On 2022-05-02 02:24 GMT   |   Update On 2022-05-02 02:24 GMT
இலங்கை அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் மற்றும் அதிபருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் போன்றவற்றை இந்த வாரம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
கொழும்பு  

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியை அரசு நாடி வருகிறது.

அதேநேரம் தங்கள் இன்னல்களுக்கு தீர்வு காண வழி தெரியாத ராஜபக்சே அரசு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைப்போல, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகி இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என புத்த மத அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன. இடைக்கால அரசு அமைக்காவிட்டால் இலங்கை அரசுக்கு எதிராக மத ஆணை பிறப்பிக்கப்படும் என புத்தமத தலைவர்களில் ஒருவரான அகலக்கடா சிறிசுமனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. எனவே புதிய பிரதமர் மற்றும் புதிய மந்திரி சபை தலைமையில் இடைக்கால அரசு அமைக்க அவரும் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்காக பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் சமீபத்தில் அவர் ஆலோசனை நடத்தினார். அத்துடன் எதிர்க்கட்சிகளுடனும் இது தொடர்பான ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக ஒன்றிணையுமாறு இலங்கை அரசியல் கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்து உள்ளார்.

தொழிலாளர் தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு அவர் வெளியிட்ட செய்தியில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-

அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் மக்கள் சார்பாக ஒன்றிணையுமாறு இந்த சர்வதேச தொழிலாளர் தினத்தில் மீண்டும் ஒருமுறை அழைக்கிறேன். அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து மக்களுக்காக உழைக்க ஒவ்வொருவரும் கைகோர்க்க வேண்டும் என்பதே எனது உண்மையான விருப்பம்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு யார் பொறுப்பு என்று ஆய்வு செய்வதற்கு பதிலாக, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கடந்த 3 ஆண்டுகளில், நாட்டில் மிகக்கடுமையான சவால்களை எதிர்கொண்டவர்கள், உழைக்கும் வர்க்கத்தினர். இந்த அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த பெரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர்களும் அவர்களே.

நாளுக்கு நாள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் இன்று மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த நிலையிலிருந்து மக்களை விடுவித்து, சூழலின் கொடுமைகளைத் தணிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த விருப்பங்களுடன்தான், இந்த தொழிலாளர் சமூகத்தின் உருவகமான சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதில் உங்களுடன் இணைகிறேன் என்று கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.

இலங்கை அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் மற்றும் அதிபருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் போன்றவற்றை இந்த வாரம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இந்த சூழலில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணையுமாறு அதிபர் கோத்தப ராஜபக்சே அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News