உலகம்
ஜோ பைடன்

அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க ஜோ பைடன் முடிவு...

Published On 2022-04-12 01:59 GMT   |   Update On 2022-04-12 01:59 GMT
அமெரிக்காவின் ஐயோவா மாகாணத்தில் இரவு நேர கேளிக்கை விடுதிக்குள் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டன் :

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி கலாசாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருகி வருகிறது. பள்ளிக்கூடம், வணிகவளாகம், கேளிக்கை விடுதி, மதுபான கூடம் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

எனவே துப்பாக்கி கலாசாரத்தை ஒழிக்க துப்பாக்கி வினியோகம் மற்றும் பயன்பாட்டில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டுமென சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் அமெரிக்காவின் ஐயோவா மாகாணத்தில் இரவு நேர கேளிக்கை விடுதிக்குள் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐயோவா மாகாணத்தின் சிடார் ரேபிட்ஸ் நகரில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் நேற்று முன்தினம் இரவு மது, ஆடல், பாடல் என மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். அப்போது அந்த கேளிக்கை விடுதிக்குள் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.

கேளிக்கை விடுதியில் இருந்த அனைவரும் உயிர் பயத்தில் அலறியடித்தபடி அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் அந்த மர்ம கும்பல் தொடர்ந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே இருந்தது.

இதில் பெண்கள் உள்பட 12 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதற்கிடையில் இந்த தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

இதையடுத்து, தாக்குதல் நடந்த கேளிக்கை விடுதியை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்த போலீசார் படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 10 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

இதனிடையே இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தவிர்க்கும் விதமாக பேரழிவு துப்பாக்கிகள் மற்றும் தனியாரால் தயாரிக்கப்பட்ட வரிசை எண்கள் இல்லாத துப்பாக்கிகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் புதிய விதிமுறைகளை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதுமட்டும் இன்றி முன்னாள் ஜனாதிபதி ஒபாமா பதவி காலத்தில் இருந்ததுபோல மது, புகையிலை, துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பணியகத்தை நடத்துவதற்கென தனியாக ஒரு அட்டர்னி ஜெனரலை ஜோ பைடன் நியமிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிக்கலாம்...ஒரு சவரன் தங்கத்தின் விலை 2 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு - இலங்கையில் அவலம்
Tags:    

Similar News