உலகம்
உக்ரைன் அதிபரை சந்தித்த பிரிட்டன் பிரதமர்

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் - கீவில் உக்ரைன் அதிபருடன் பிரிட்டன் பிரதமர் சந்திப்பு

Published On 2022-04-10 00:41 IST   |   Update On 2022-04-10 22:38:00 IST
உக்ரைன் மீது ரஷியா 46-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. கீவ் உள்ளிட்ட நகரங்களைக் கைப்பற்றும் ரஷிய படைகளின் முயற்சி வெற்றி பெறவில்லை.
10.4.2022

20.30: ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் நாளை ஆலோசனை நடத்துகின்றனர். இந்த கூட்டத்தில் ரஷியாவுக்கு எதிராக ஆறாவது சுற்று பொருளாதாரத் தடைகள் விதிப்பது பற்றி விவாதிக்கப்படுகிறது.

19.40: உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகளுக்கு தலைமை தாங்க புதிய போர் தளபதியாக ஜெனரல் டுவோர்னிகோவை அந்நாடு நியமித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

17.20: தலைநகர் கீவ்வைச் சுற்றியுள்ள பகுதியில் இதுவரை 1,222 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு வழக்கறிஞர் இரினா வெனெடிக்டோவா குறிப்பிட்டுள்ளார்.

16.10: ராணுவச் சட்டத்தை மீறி நாட்டை விட்டு வெளியேற முயன்ற  2,200 உக்ரைன் ஆண்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் எல்லைப் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

05.45: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. தற்போது புதினின் 2 மகள்களான மரியா வொரொன்ட்சோவா, கேடரினா டிகோனோவா மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடை விதித்துள்ளது. அவர்களது சொத்துகளை முடக்கி உள்ளதுடன், அவர்களுக்கு பயண தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், புதின் மகள்கள் மீது இங்கிலாந்து அரசும் பொருளாதார தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷிய நாட்டைச் சேர்ந்த 1,200 தனி நபர்கள், நிறுவனங்கள் மீது இங்கிலாந்து பொருளாதார தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

03.15: உக்ரைனின் கிழக்கில் பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பத்து மனிதாபிமான தாழ்வாரங்கள் திறக்கப்படும் என உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்தார்.

இந்த தாழ்வாரங்கள் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மற்றும் சபோரிஜியா பகுதிகளில் உள்ள பல நகரங்களை விட்டு வெளியேற மக்களை அனுமதிக்கும் என ஏ.பி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

00.25: உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து வருகிறது. உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

போர் நடந்து வரும் சூழ்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உக்ரைனுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என உறுதிபட தெரிவித்தார்.

Similar News