உலகம்
இம்ரான் கான்

பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை சந்திக்க தயார்- இம்ரான் கான்

Published On 2022-03-31 17:06 GMT   |   Update On 2022-03-31 17:06 GMT
தீர்மானத்தை தோற்கடிக்க 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், இம்ரான் கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் கட்சி விலக்கியதால், அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற இருந்த நிலையில் பாராளுமன்றம் திடீரென ஞாயிற்றுக் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும்.

பாகிஸ்தானில் மொத்தம் 342 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. தீர்மானத்தை தோற்கடிக்க 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், இம்ரான்கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் (எம்கியூஎம்) கட்சி விலக்கிக்கொண்டு எதிர்க்கட்சி பக்கம் சாய்ந்துள்ளது. இதனால், பாராளுமன்றத்தில் இம்ரான்கான் கட்சி கூட்டணியின் பலம் 179-ல் இருந்து 164 ஆக குறைந்துள்ளது.  எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், தேசிய சபையில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பை சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.

‘பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்படவேண்டும் அல்லது பாகிஸ்தான் கடும் விளைவுகளை சந்திக்கும் என்று வெளிநாட்டு சக்திகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. எனது 20 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையை பார்த்தவர்களுக்கு தெரியும், நான் கடைசி பந்துவரை ஆடுவேன். நாடு எங்கு செல்லும் என்பதை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு முடிவு செய்யும்’ என்றார் இம்ரான் கான்.
Tags:    

Similar News