உலகம்
கோப்பு புகைப்படம்

விரைவில் 4-வது தவணை தடுப்பூசி?- உலக நாடுகளில் ஆய்வுகள் தீவிரம்

Published On 2021-12-30 13:16 IST   |   Update On 2021-12-30 15:14:00 IST
60 வயது நிரம்பியவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு இஸ்ரேல் நாட்டு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.
உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த டிசம்பர் 22 முதல் 28-ம் தேதி வரை மட்டும் உலக அளவில் 9 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்கு 4-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.

உலக அளவில் 36 நாடுகளில் பூஸ்டர் (3-வது தவணை) தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது ஒமைக்ரான் உருமாற்ற வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 4-வது தவணை தடுப்பூசியை செலுத்துவது குறித்து உலக நாடுகள் சிந்தித்து வருகின்றன.

இஸ்ரேல் நாட்டில் 4-வது தவணை தடுப்பூசி அதிவேகமாக பரவி வரும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துமா என ஆய்வுகள் தொடங்கியுள்ளன. அந்நாட்டில் உள்ள சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு 4-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனைக்கான முடிவுகள் 2 வாரங்களில் தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இஸ்ரேலில் ஒமைக்ரான் பரவலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 60 வயது நிரம்பியவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு அந்நாட்டு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து ஃபைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரி கூறுகையில், பூஸ்டர் தடுப்பூசி ஒமைக்ரானுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. இருப்பினும் உருமாற்றம் அடைந்து வரும் வைரஸின் தாக்கம் தடுப்பூசியின் ஆற்றலை குறைக்கும் வாய்ப்புள்ளதால் நாம் எதிர்பார்த்ததை விட விரைவாகவே 4-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய சூழல் வந்துள்ளது  என தெரிவித்தார்.

4-வது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு ஜெர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் காரல் லாடர்பேச் ஆதரவு தெரிவித்துள்ளார். இருப்பினும் அமெரிக்காவின் ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனம் கூறுகையில் 4-வது தவணை தடுப்பூசியை பற்றி ஆலோசிக்கும் அவசியம் இன்னும் வரவில்லை என மறுத்துள்ளது.

இதையடுத்து 4-வது தவணை தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருமா என்ற கேள்வி உலக மக்களிடையே எழுந்துள்ளது.

Similar News