செய்திகள்
இரவு 10 மணிக்கு தூங்கிவிட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம்

இரவு 10 மணிக்கு தூங்கிவிட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம் - சர்வதேச ஆய்வில் புது தகவல்

Published On 2021-11-15 08:05 GMT   |   Update On 2021-11-15 08:05 GMT
ஒருவருக்கு தூக்கமின்மை அல்லது அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுந்தால் அல்லது இரவில் சுவாச சிக்கல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

நமது உடலை நிதானப்படுத்தவும், புத்துணர்ச்சி பெறவும் தூக்கம் சிறந்த வழிமுறையாகும்.

சரியான அளவில் தூங்கினால் உடல் மற்றும் மன அழுத்தங்கள் நீங்குகிறது. மேலும் இருதய சிக்கல் உள்பட பல்வேறு நோய்களை உருவாக்கும் ஆபத்தையும் குறைக்கிறது.

ஆரோக்கியமான இருதயத்தை உறுதிப்படுத்துவதற்கு தூங்குவதற்கான உகந்த நேரம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்படி இரவு 10 முதல் 11 மணிக்குள் தூங்கிவிட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் இதுதொடர்பாக 43 முதல் 79 வயது வரை உள்ள 88 ஆயிரம் பேரிடம் இருந்து தகவல்களை பெற்று ஆய்வு செய்தது. இரவு 10 முதல் 11 மணிக்குள் தூங்க சென்றவர்களைவிட இரவு 11 மணிக்கு பிறகு தூங்குபவர்களுக்கு இருதய நோய் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது என்று ஆய்வில் தெரிய வந்தது.

தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் தினமும் குறைந்தது 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது.

மிக சமீபத்திய கண்டுபிடிப்பின்படி தூக்கம் தொடங்குவதற்கும் இருதய பாதிப்புக்கும் இடையேயான சாத்தியமான தொடர்பை பரிந்துரைக்கிறது. டாக்டர் டேவிட் பிளான்ஸ் கூறும் போது, ‘‘24 மணிநேர சுழற்சியில் தூங்குவதற்கான உகந்த நேரத்தை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. நள்ளிரவுக்கு பிறகு தூங்குவது மிகவும் ஆபத்தானது. இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் தூங்கி விட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம். இது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது’’ என்றார்.

அதே நேரத்தில் இரவு 10, 11 மணிதான் தூங்குவதற்கு சிறந்த நேரம் என்பது அனைவருக்கும் பொருந்தாது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் ஆஸ்டர் சி.எம்.ஐ. மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் சஞ்சய்பட் இதுதொடர்பாக கூறியதாவது:-

தூங்குவதற்கு சரியான நேரம் என்று எதுவும் இல்லை. சரியாக 8 மணி நேரம் இடைவிடாத தூக்கம் ஆரோக்கியமான இதயத்துக்கும், உடல் ஆரோக்கிய செயல்பாட்டுக்கும் இன்றியமையாதது.

நன்றாக தூங்குவதற்காக மது அல்லது மாத்திரைகளை பயன்படுத்தக் கூடாது. ஒருவருக்கு தூக்கமின்மை அல்லது அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுந்தால் அல்லது இரவில் சுவாச சிக்கல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News