செய்திகள்
யாகூ

சட்ட சிக்கல்கள் இருப்பதாக புகார்: சீனாவில் இருந்து யாகூ நிறுவனம் வெளியேறியது

Published On 2021-11-03 08:46 GMT   |   Update On 2021-11-03 10:04 GMT
கடந்த மாதம் சீனாவில் இருந்து அமெரிக்காவின் ‘மைக்ரோ சாப்ட்’ நிறுவனம் தனது லிங்க்ட் இன் சேவையை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்:

பிரபல பன்னாட்டு நிறுவனமான ‘யாகூ’ சீனாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறி உள்ளது. சீனா அரசு தற்போது பெரும் நிறுவனங்களுக்கு பல்வேறு சட்டங்களை விதித்துள்ளது.

இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் அதிருப்தி அடைந்துள்ளன. அந்நாட்டு அரசின் நடவடிக்கைகள் பெரும் நிறுவனங்களுக்கு எதிராக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ‘யாகூ’ நிறுவனம் சீனாவில் தற்போது நிலவும் சட்ட ரீதியிலான நெருக்கடி காரணமாக அந்த நாட்டில் இருந்து முற்றிலும் வெளியேறுவதாக அறிவித்தது.

அதன்படி ‘யாகூ’ நிறுவனம் தனது சேவையை சீனாவில் உள்ள பயனாளர்களுக்கு நிறுத்தி விட்டது. இதுகுறித்து ‘யாகூ’ நிறுவனம் தரப்பில் கூறும் போது, ‘சீனாவில் தொழில் செய்ய சவாலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு நிலவும் சிக்கலான சட்டநிலை காரணமாக ‘யாகூ’வின் அனைத்து சேவைகளும் கடந்த 1-ந் தேதி முதல் சீனாவில் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

‘யாகூ’ நிறுவனம் பயனாளர்களின் உரிமைகள் இலவச மற்றும் திறந்த இணையம் ஆகியவற்றில் எப்போதும் உறுதியாக உள்ளது. இதுவரை சீனாவில் எங்களுக்கு ஆதரவு அளித்த வர்களுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளது.



கடந்த மாதம் சீனாவில் இருந்து அமெரிக்காவின் ‘மைக்ரோ சாப்ட்’ நிறுவனம் தனது லிங்க்ட் இன் சேவையை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 2-வது நிறுவனமாக ‘யாகூ’ சீனாவில் இருந்து வெளியேறி உள்ளது.

Tags:    

Similar News