செய்திகள்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மொனிஹா கலாசெனஸ்

பிரேசிலில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி

Published On 2021-01-17 21:29 GMT   |   Update On 2021-01-17 21:29 GMT
பிரேசிலில் அஸ்ட்ரா ஜெனகா மற்றும் சினோவாக் ஆகிய 2 தடுப்பூசிகள் அவசரகால மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரேசிலியா:  

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ள நாடு பிரேசில். அந்நாட்டில் 84 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு 2 லட்சத்து 9 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மற்றும் சீனாவின் சினோவாக் நிறுவனத்தின் 2 கொரோனா தடுப்பூசிகளை பிரேசிலில் அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்கும் படி விண்ணப்பிக்கப்பட்டது.

இந்த விண்ணப்பம் தொடர்பாக பிரேசில் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று ஆலோசனை நடத்தியது.

அந்த ஆலோசனையில் பிரேசிலில் அஸ்ட்ராஜெனகா மற்றும் சினோவாக் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளையும் அவசரகால மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டது.

அனுமதி வழங்கப்பட்ட சில மணி நிமிடங்களில் பிரேசிலில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

54 வயது நிரம்பிய மொனிஹா கலாசெனஸ் என்ற செவிலியர் பிரேசிலின் முதல் நபராக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவருக்கு சினோவாக் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோ தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன் என அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News