செய்திகள்
பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்படும் காட்சி.

வெளிநாட்டு நபர்கள் மூலம் பரவும் கொரோனா... எல்லைப்பகுதிகளில் பரிசோதனையை தீவிரப்படுத்தியது சீனா

Published On 2020-04-22 11:25 IST   |   Update On 2020-04-22 11:25:00 IST
வெளிநாட்டு நபர்கள் மூலம் சீனாவில் கொரோனா வைரஸ் தலைதூக்க தொடங்கியிருப்பதால், எல்லைப்பகுதிகளில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பீஜிங்:

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 210 நாடுகளில் பரவி 1.77 லட்சம் உயிர்களை பலி வாங்கி உள்ளது. தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. ஆனால், இந்த வைரஸ் வெளிப்பட்ட சீனாவில் படிப்படியாக நிலைமை கட்டுக்குள் வந்தது. இதனால் இரண்டு மாதத்திற்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

சமூக தொற்று கட்டுப்படுத்தப்பட்டதாகவும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே வைரஸ் உறுதி செய்யப்படுவதாகவும் சீனா கூறியுள்ளது. கடந்த சில தினங்களாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இந்நிலையில், சீனாவில் நேற்றைய நிலவரப்படி மொத்தம் 82,788 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், உயிரிழப்பில் எந்த மாற்றமும் இன்றி 4632 ஆக உள்ளதாகவும் தேசிய சுகாதார ஆணையம் கூறி உள்ளது. 77 ஆயிரத்து 151 பேர் குணமடைந்துள்ளதாகவும், 1005 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் 30 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 23 பேர் வெளிநாடு சென்று வந்த பயண தொடர்பு உள்ளவர்கள். இதன்மூலம் வெளிநாட்டு பயண தொடர்பால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1610 ஆக உயர்ந்திருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கூறி உள்ளது. இதில் 811 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், 41 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நபர்கள் மூலம் கொரோனா பரவத் தொடங்கியிருப்பதால், அனைத்து எல்லைப் பகுதிகளிலும் தீவிர பரிசோதனை மற்றும் சிகிச்சையை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். அப்பகுதிகளுக்கு கூடுதல் மருத்துவ உபகரணங்கள், பரிசோதனை கருவிகள் மற்றும் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Similar News