செய்திகள்

மஞ்சள் அங்கி போராட்டத்தில் வன்முறை - பாரீஸ் நகரில் கடைகளுக்கு தீவைப்பு

Published On 2019-03-17 18:41 GMT   |   Update On 2019-03-17 18:41 GMT
மஞ்சள் அங்கி போராட்டத்தில் தலைநகர் பாரீசில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திடீர் வன்முறை வெடித்தது. #YellowVestProtest #Paris
பாரீஸ்:

பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அரசு உயர்த்தியது அங்கு மாபெரும் போராட்டத்துக்கு வித்திட்டது. கார் டிரைவர்களின் மஞ்சள் அங்கியை அணிந்து கொண்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இது ‘மஞ்சள் அங்கி போராட்டம்’ என அழைக்கப்பட்டது. வார இறுதி நாட்களில் மட்டும் நடைபெறும் இந்த போராட்டத்துக்கு அதிபர் மெக்ரான் தலைமையிலான அரசு பணிந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால் போராட்டத்தின் தீவிரம் சற்று குறைந்தது. எனினும் அரசின் பல்வேறு கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து வாரஇறுதி நாட்களில் போராட்டம் நடந்து வருகிறது.



அந்த வகையில் நேற்று முன்தினம் தலைநகர் பாரீசில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திடீர் வன்முறை வெடித்தது. போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர்.

மேலும் அங்குள்ள, அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் வந்து செல்லக்கூடிய புகழ்பெற்ற ஓட்டல் மற்றும் ஆடம்பர கைப்பைகளை விற்கும் கடை, வங்கி கட்டிடம் உள்ளிட்டவற்றுக்கு அவர்கள் தீவைத்தனர். இதையடுத்து அவர்களை விரட்டி அடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, தடியடியும் நடத்தினர்.

இதனால் பாரீஸ் நகரமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. இந்த வன்முறையில் பலர் காயம் அடைந்ததாகவும், 120-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். #YellowVestProtest #Paris 
Tags:    

Similar News