செய்திகள்

குழந்தையை மறந்து ஏறிய தாய் - மலேசியா புறப்பட்டு சென்ற விமானம் சவுதி திரும்பியது

Published On 2019-03-12 14:03 GMT   |   Update On 2019-03-12 14:06 GMT
சவுதி அரேபியாவில் இருந்து மலேசியா நோக்கிச் சென்ற விமானத்தில் ஒரு பெண் பயணி தனது குழந்தையை மறந்து வந்து விட்டதாக கூறியதால் அந்த விமானம் அவசரமாக ஜெட்டாவில் தரையிறங்க நேர்ந்தது. #Saudiplane #jeddahairport #motherforgetsbaby
ரியாத்:

சவுதி அரேபியா நாட்டின் ஜெட்டா நகரில் உள்ள மன்னர் அப்துல் அஜிஸ் விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் நோக்கி சமீபத்தில் சவுதி நாட்டுக்கு சொந்தமான ஒரு விமானம் புறப்பட்டு சென்றது.

வானத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அதில் வந்த ஒரு பெண், தனது குழந்தையை ஜெட்டா விமான நிலையத்தின் வரவேற்பு பகுதியில் மறந்து விட்டுவிட்டு, விமானத்தில் ஏறி விட்டதாகவும், குழந்தையை கொண்டு வருவதற்காக விமானத்தை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் பணிப்பெண்களிடம் பதற்றத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் உடனடியாக விமானிக்கு தெரிவிக்கப்பட்டது. விமானியும் ஜெட்டா விமான நிலையத்தை தொடர்புகொண்டார். நிலைமையை எடுத்துக்கூறி அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார்.

வழக்கமாக, விமானங்களில் மிகவும் ஆபத்தான கோளாறு, பயணிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக மட்டுமே இதுபோன்ற அனுமதி அளிக்கப்படும். மற்றபடி, விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற பிறகு அந்த பகுதியில் வட்டமடிக்கவோ, உடனடியாகவோ தரையிறங்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது.



இந்நிலையில், குழந்தையை தவறவிட்டு விமானத்தில் ஏறிவிட்ட அந்த தாயின் வேண்டுகோளின்படி ஜெட்டா விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க ஜெட்டா விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் சிறிதுநேர ஆலோசனைக்கு பின்னர் அனுமதி அளித்ததாக சவுதி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 

கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் அந்த விமானி பேசிய பதிவுகளையும் சில ஊடகங்கள் வீடியோவாக வெளியிட்டுள்ளன. #Saudiplane #jeddahairport #motherforgetsbaby
Tags:    

Similar News