செய்திகள்

ஈரானில் பாக். பயங்கரவாதிகள் தாக்குதல்- 27 ராணுவ வீரர்கள் பலி

Published On 2019-02-17 09:49 GMT   |   Update On 2019-02-17 09:49 GMT
இந்தியாவை தொடர்ந்து ஈரானில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஸ் அல்-அடில் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
தெக்ரான்:

இந்தியாவின் எல்லை மாநிலமான காஷ்மீரில் புல்வா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்-இ-முகமது என்ற பயங்கரவா அமைப்பினர் பொறுப்பெற்றனர்.

இந்த நிலையில், ஈரானிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையில் ஈரானின் சிஸ்டான் பகுதி உள்ளது. அங்கு எல்லை பாதுகாப்பு பணியில் ஈரான் ராணுவம் ஈடுபட்டிருந்தது.

அப்போது அங்கு புகுந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். அதில் 27 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஸ் அல்-அடில் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த அமைப்பும், இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஸ்-இ- முகமது பயங்கரவாத அமைப்பும் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவு பெற்றவை.

எனவே, இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து ஈரான் ராணுவ தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் முகமது அலி ஜாப்ரி பேட்டி அளித்தார்.

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இது பாகிஸ்தான் அரசக்கு நன்றாக தெரியும். இதற்கு பாகிஸ்தான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.

மேலும் அவர் கூறும் போது இந்த தாக்குதலில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு தொடர்பு இருந்தால் அவர்களுக்கும் தக்க பதிலடி கொடுப்போம் என்றும் அவர் கூறினார்.
Tags:    

Similar News