செய்திகள்

துபாயில் இந்தியரை கொன்ற பாகிஸ்தானியருக்கு 7 ஆண்டு சிறை

Published On 2019-02-12 06:22 GMT   |   Update On 2019-02-12 06:22 GMT
துபாயில் உடன் தங்கியிருந்த இந்தியரை கொன்ற வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #PakManJailed
துபாய்:

துபாயில் ஜெபேல் அலி ஹோட்டலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி, அறையில் உள்ள மின்விளக்குகளை அணைக்காமல் வெளியேறிய காரணத்தினால் இந்தியருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதன் பின்னர் அந்த பாகிஸ்தானியை உடைமைகளுடன் வெளியேறுமாறு இந்தியர் கூறியுள்ளார்.  இதனால் பாகிஸ்தானியர் அந்த  அறையில் இருந்து வெளியேறினார். சிறிது நேரம் கழித்து அறைக்கு திரும்பி வந்த பாகிஸ்தான் நபர் ஆத்திரமடைந்து தனது பையில் இருந்து கத்தியை எடுத்து இந்தியரைக் குத்தியுள்ளார். இதில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து ரூமில் தங்கியிருந்த மற்ற நபர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்,  கொலை செய்யப்பட்ட இந்தியரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நெஞ்சில் கத்தியால் ஆழமாக குத்தப்பட்டதால் உயிரிழந்திருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் நபர், அறைக்கு வந்து தூங்கிக்கொண்டிருந்த மற்றவர்களுக்கும் தொந்தரவை ஏற்படுத்தும் வகையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக ஹோட்டலின் மேற்பார்வையாளர் கூறினார்.

இச்சம்பவத்திற்கு முன்னதாக மது அருந்தியிருந்ததாகவும், எந்தவித விரோதத்தோடும் கொலை செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் நபர், விசாரணையின் போது கூறினார்.

இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த துபாய் கோர்ட்டு, குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. குற்றவாளி 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னர் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க வேண்டும்  என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #PakManJailed
Tags:    

Similar News