செய்திகள்

சிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன் ஒப்புதல்

Published On 2019-01-21 05:24 GMT   |   Update On 2019-01-21 05:24 GMT
சிரியா விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துருக்கி அதிபர் எர்டோகன் ஒப்புதல் அளித்துள்ளனர். #SyriaIssue #Trump #Erdogan
வாஷிங்டன்:

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தை தோற்கடித்துவிட்டதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்கிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதனையடுத்து, அமெரிக்க படையினர் சிரியாவில் இருந்து வெளியேறத் தொடங்கி உள்ளனர்.

இதையடுத்து, வடக்கு சிரியாவில் அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் குர்து போராளிகள் மீது தாக்குதல் தொடுக்க தயாராகி வருவதாக துருக்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு தாக்குதல் நடத்தும்பட்சத்தில் அமெரிக்காவும் துருக்கியும் மோதும் நிலை ஏற்படும்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், துருக்கி அதிபர் தாயிப் எர்டோகனும் தொலைபேசி வாயிலாக பேசினர். அப்போது, வடகிழக்கு சிரியாவில் உள்ள பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இருவரும் ஒப்புக்கொண்டனர்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிரியாவில்  எஞ்சியுள்ள பயங்கரவாத சக்திகளை தோற்கடிப்பதன் முக்கியத்துவம் குறித்து டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். வடகிழக்கு சிரியா மற்றும் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு இலக்கை அடைவதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இரு நாட்டின் தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், அமெரிக்கா, துருக்கி இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் ஆலோசித்தனர்’ என கூறப்பட்டுள்ளது.


சிரியாவில் குர்திஷ் படையினர் வசம் உள்ள மன்பிஜ் நகரம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைவதற்கு, இந்த பேச்சுவார்த்தை உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

சமீபத்தில் மன்பிஜ் நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #SyriaIssue #Trump #Erdogan
Tags:    

Similar News