செய்திகள்

இலங்கையில் புதிய மந்திரிசபை பதவியேற்பு - அதிபர் வசம் போலீஸ் துறை

Published On 2018-12-21 03:57 GMT   |   Update On 2018-12-21 03:57 GMT
இலங்கையில் புதிய மந்திரிசபை பதவியேற்றுக்கொண்டது. அதிபர் சிறிசேனா மந்திரி சபையின் தலைவர் என்ற முறையில் போலீஸ் துறையை தன்னிடமே வைத்துக்கொண்டார். #SriLankaCabinet #Sirisena
கொழும்பு:

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயை கடந்த அக்டோபர் 26-ந்தேதி நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதனால் அரசியல் குழப்பம் ஏற்பட்டதுடன், அதிபரின் இந்த நடவடிக்கைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டும் முட்டுக்கட்டை போட்டது.

இதைத்தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கேயை மீண்டும் அவர் கடந்த 16-ந்தேதி பிரதமராக நியமித்தார். இதன் தொடர்ச்சியாக 30 நபர் கொண்ட புதிய மந்திரி சபை நேற்று பதவியேற்றுக் கொண்டது. அதிபரின் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மந்திரிகள் ஒவ்வொருவருக்கும் அதிபர் சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.



புதிய மந்திரி சபையில் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி இடம் பெற்றுள்ள ஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்த 29 பேர் இடம் பெற்று உள்ளனர். இதில் முக்கிய எம்.பி.க்களான மங்கள சமரவீராவுக்கு நிதித்துறையும், சகல ரத்னாயகவுக்கு துறைமுகத்துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இலங்கையில் அதிகாரமிக்க துறையாக கருதப்படும் பாதுகாப்பு படை மற்றும் போலீஸ் துறையை ரணில் பரிந்துரைத்தவர்களுக்கு வழங்காத அதிபர் சிறிசேனா, மந்திரி சபையின் தலைவர் என்ற முறையில் அந்த துறையை தன்னிடமே வைத்துக்கொண்டார். இதன் மூலம் அதிபர், பிரதமர் இடையிலான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றே தெரிகிறது. #SriLankaCabinet #Sirisena
Tags:    

Similar News