செய்திகள்

இளவரசர் மீது கொலைபழி - அமெரிக்காவுக்கு சவுதி அரசு கண்டனம்

Published On 2018-12-17 04:58 GMT   |   Update On 2018-12-17 04:58 GMT
துருக்கி நாட்டில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கு சவுதி இளவரசருக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க பாராளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு சவுதி அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. #KhashoggiMurder #SaudiCrownPrince
ரியாத்:

துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா நாட்டு தூதரகத்தில்  பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கு சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க பாராளுமன்றம் கடந்த வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.

மேலும், ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து சவுதி அரேபியா போர் ஆயுதங்கள் கொள்முதல் செய்வதையும் எதிர்த்து அமெரிக்கா அந்த தீர்மானத்தில் கருத்து தெரிவித்திருந்தது.



இந்நிலையில், பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலையில் சவுதி இளவரசருக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க பாராளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு சவுதி அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

'சவுதி அரேபியா  நாட்டின் இறையாண்மையை அவமதிக்கும் வகையிலும், வளைகுடா பிராந்தியம் மற்றும் சர்வதேச அளவில் சவுதி அரேபியாவுக்கு இருக்கும் பங்களிப்பை குறைத்து மதிப்பிடும் வகையிலும், போதிய ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை மட்டுமே அடிப்படையாக வைத்து அமெரிக்க பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை சவுதி அரேபியா அரசு நிராகரிக்கிறது.

மேலும், எங்கள் நாட்டின் தலைவரை அவமதிக்கும் வகையிலும், உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யும் விதமாகவும் சுமத்தப்படும் எவ்விதமான - அனைத்து விதமான குற்றச்சாட்டுகளையும் எங்கள் அரசு புறக்கணிக்கிறது’ என சவுதி அரேபியா அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KhashoggiMurder #SaudiCrownPrince 
Tags:    

Similar News