செய்திகள்

ஜப்பானில் பயிற்சியில் ஈடுபட்டபோது அமெரிக்க போர் விமானங்கள் மோதல் - 5 வீரர்கள் மாயம்

Published On 2018-12-07 05:25 GMT   |   Update On 2018-12-07 05:25 GMT
ஜப்பானில் பயிற்சியில் ஈடுபட்டபோது அமெரிக்க போர் விமானங்கள் நடுவானில் மோதி கடலில் விழுந்தது. இதில் மாயமான 5 வீரர்களை அமெரிக்க மற்றும் ஜப்பான் படையினர் தேடிவருகிறார்கள். #Aircraftscollide
டோக்கியோ:

அமெரிக்க ராணுவம் உலகின் பல்வேறு நாடுகளிலும் ராணுவ முகாம்களை அமைத்துள்ளது. அதன்படி ஜப்பானிலும் இவற்றின் ராணுவ முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.

அங்குள்ள யுவாகுனி என்ற இடத்தில் அமெரிக்க கடற்படை தளம் இருக்கிறது. நேற்று இரவு கடற்படை வீரர்கள் விமானத்தில் பறந்து போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது குண்டுவீச்சு விமானத்திற்கு மற்றொரு விமானத்தில் இருந்து இரவு நேரத்தில் பெட்ரோல் நிரப்புவது தொடர்பான பயிற்சி கடற்பகுதிக்கு மேலே நடந்தது. எப்.ஏ.18 ரக போர் விமானத்துக்கு சி-130 என்ற பெட்ரோல் டேங்கர் விமானம் மூலம் எரிபொருள் நிரப்ப பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென 2 விமானங்களும் மோதிக் கொண்டன. இதில் அவை நொறுங்கி கடலில் விழுந்தது. எப்.ஏ.18 விமானத்தில் 2 வீரர்களும், சி-130 விமானத்தில் 5 வீரர்களும் இருந்தனர்.

உடனடியாக அங்கு மீட்பு பணி நடந்தது. ஜப்பான் கடற்படையை சேர்ந்த 9 விமானங்களும், 3 கப்பல்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டன. அப்போது கடலில் மிதந்து கொண்டிருந்த 2 வீரர்களை மீட்டனர்.

அதில் ஒருவர் கவலைக்கிடமான முறையில் இருக்கிறார். மற்ற 5 வீரர்களை காணவில்லை. தொடர்ந்து அமெரிக்க மற்றும் ஜப்பான் படையினர் தேடிவருகிறார்கள்.

இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, இரவு நேரத்தில் நடுவானில் விமானங்களில் எரிபொருள் நிரப்புவது கடினமாக வி‌ஷயமாகும். இந்த பயிற்சியில் ஈடுபட்டதால் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு விட்டது என்று கூறியுள்ளார்.

நேற்று ஜப்பான் பகுதியில் கடுமையான மேகக்கூட்டம் இருந்தது. எனவே, வானிலை காரணமாக இரு விமானங்களும் மோதி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. #Aircraftscollide

Tags:    

Similar News