செய்திகள்

உக்ரைன் கடற்படை கப்பல்களை கைப்பற்றியது ரஷியா- ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை

Published On 2018-11-26 07:19 GMT   |   Update On 2018-11-26 07:19 GMT
கிரிமியா அருகே உக்ரைன் நாட்டு கடற்படை கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதையடுத்து, இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. #Crimea #RussiaSeizesShips
கீவ்:

உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த விவகாரத்தில் கிரிமியா பகுதி மக்கள், அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே இணைந்ததாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. கிரிமியாவை ரஷ்யா நாட்டின் தெற்கு பகுதியில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக அதிபர் புதின் பிறப்பித்த ஆணை செல்லாது என்று உக்ரைனும் அறிவித்தது. அதன்பின்னர் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமிடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா நேற்று கைப்பற்றியது. கிரிமியா அருகே உள்ள கெர்ச் ஜலசந்தியை உக்ரைன் கப்பல்கள் கடந்தபோது, தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி இந்த நடவடிக்கையை ரஷ்ய ராணுவம் எடுத்துள்ளது. 


ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்தியானது, அஸோவ் கடலுக்கு செல்லும் ஒரே பாதை ஆகும். அந்த பகுதியில் ரஷ்யா தனது டேங்கர் கப்பலை நிறுத்தி உள்ளது. அத்துடன் ரஷ்ய போர் விமானங்களும் அந்த பகுதியில் பறந்து கண்காணித்தபடி உள்ளது.

உக்ரைன் கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதுபற்றி விவாதிப்பதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. #Crimea #RussiaSeizesShips
Tags:    

Similar News