செய்திகள்

இரு முனைகளில் இருந்து கலிபோர்னியா காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராட்டம் - பலி 50 ஆக உயர்வு

Published On 2018-11-14 20:00 GMT   |   Update On 2018-11-14 20:00 GMT
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. #CaliforniaFire #CaliforniacampFire
பாரடைஸ்:

அமெரிக்காவில் 3 இடங்களில் பரவி வருகிற காட்டுத்தீயின் போக்கு தீவிரமாக உள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தெற்கு மற்றும் வடக்கு முனைகளில் இருந்து ஆயிரக்கணக்கான தீயணைப்பு படை வீரர்கள் போராடி வருகிறார்கள். 1 லட்சத்து 25 ஏக்கர் நிலப்பரப்பில் பரவி உள்ள காட்டுத்தீயில் 30 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாதம் முழுக்க போராடினால்தான் தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என சொல்லப்படுகிறது.



அமெரிக்க காட்டுத்தீ வரலாற்றில் மிக மோசமான காட்டுத்தீ இதுதான் என்றும் கூறப்படுகிறது. தீயணைப்பு பணியில் முழு மூச்சுடன் போராடி வருகிற வீரர்களுக்கு ஜனாதிபதி டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாகாணம் முழுவதும் இந்த காட்டுத்தீக்கு பலியானவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி 50 ஆக உயர்ந்துள்ளது. பல நூறு பேர் காணாமல் போய் விட்டனர்.

கேம்ப் தீ என்று சொல்லப்படுகிற பாரடைஸ் நகர பகுதி காட்டுத்தீதான் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பட்டி நகர ஷெரீப் கோரி ஹோனியா நிருபர்களிடம் பேசும்போது, “ஏற்கனவே 42 பேர் பலியான நிலையில், பாரடைஸ் நகரில் மேலும் 6 பேரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த 6 பேரும் வீடுகளுக்குள் தீயில் கருகி இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது” என்றார். இங்கு பலியானவர்களில் பெரும்பாலோர் மூத்த குடிமக்கள் என தகவல்கள் கூறுகின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வடக்கே ஊல்சி தீ என்று அழைக்கப்படுகிற காட்டுத்தீக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். 
Tags:    

Similar News