செய்திகள்

கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ- 9 பேர் உடல் கருகி பலி

Published On 2018-11-10 07:07 GMT   |   Update On 2018-11-10 07:07 GMT
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. #CaliforniaWildfires
வாஷிங்டன்:

அமெரிக்காவில் வறண்ட வானிலை நிலவும் வடக்கு கலிபோர்னியாவில் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. மொத்தம் 16 இடங்களில் காட்டுத் தீ பிடித்துள்ளது. இதில் இரண்டு இடங்களில் மட்டும் காற்றின் வேகம் காரணமாக தீ கொளுந்துவிட்டு எரிவதுடன், பல ஏக்கர் நிலப்பரப்பிற்கு வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீயில் கருகிவிட்டன.

தற்போது மணிக்கு 35 கிமீ வேகத்தில் தீ பரவி வருவதால் எங்கு திரும்பினாலும் தீப்பிழம்பாக காட்சி அளிக்கிறது. தீப்பிடித்த பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்த சுமார் 1.5 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலம் தீயின் உக்கிரத்தை தணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.



இந்நிலையில், காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இதில் 5 பேர் காருக்குள் இறந்து கிடந்தனர். தீப்பிடித்த பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ள முடியாத அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

வடக்கு கலிபோர்னியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #CaliforniaWildfires
Tags:    

Similar News