செய்திகள்

வேகம் குறைந்ததால் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது- புதிய தகவல்கள்

Published On 2018-11-01 05:16 GMT   |   Update On 2018-11-01 08:51 GMT
இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் வேகம் குறைந்ததால் கடலில் விழுந்து நொறுங்கியதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
ஜகார்த்தா:

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவுக்கு சென்ற ‘லயன் ஏர்’ பயணிகள் விமானம் புறப்பட்ட 13 நிமிடத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது.

இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 178 பயணிகள், 2 பச்சிளங் குழந்தைகள், ஒரு சிறுவன், 2 விமானிகள், 6 பணியாளர்கள் என 189 பேர் பலியானார்கள்.

இந்தோனேசிய நிதித்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய 20 ஊழியர்களும் அந்த விமானத்தில் பயணம் செய்தனர்.

விமானம் கடலில் விழுவதற்கு முன் பதிவான செல்போன் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் என்ஜின் இயக்கம் நின்று மின் விளக்கு, ஏ.சி., காற்றழுத்த கருவி போன்றவைகள் செயல்படாததால் பயணிகள் அதிர்ச்சியுடன் கதறினார்கள். இனி பிழைக்க வழியில்லை என்று உயிர் போகும் கடைசி நிமிடத்தில் கடவுளை உருக்கமாக வேண்டி அழும் கண்ணீர் காட்சிகள் உலகையே சோகத்தில் ஆழ்த்தியது.

விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதப்பது கண்டு பிடிக்கப்பட்டதால், மீட்புப் படை அப்பகுதிக்கு விரைந்தது. ஜகார்த்தா, பாண்டுங், லம்பங் ஆகிய பகுதிகளில் இருந்து படகுகள், ஹெலிகாப்டர்கள், கடற்படை கப்பல்கள் தேடும் பணிக்கு அனுப்பப்பட்டன. மீட்புக் குழுவினர் பயணிகள் சிலரது உடல்கள், ஆவணங்களை மீட்டுள்ளனர்.


விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 115 அடி ஆழத்தில் விமானத்தின் முக்கிய பாகங்கள் கிடைக்கக் கூடும் என கூறப்படுகிறது. 

ராணுவ வீரர்கள், மீனவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 3 சிறப்பு கப்பல்களும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன.

கருப்புப் பெட்டியைக் கண்டுபிடித்த பிறகே விமான விபத்திற்கான முழு விவரங்கள் தெரிய வரும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

விமானம் சில மாதங்களுக்கு முன்புதான் பராமரிப்புப் பணிக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.


விமானம் உயரே பறந்ததும் 12-வது நிமிடத்தில் திடீர் என்று அதன் வேகம் குறைந்தது. இதையடுத்து உடனே விமானத்தை ஜகார்த்தாவுக்கு திருப்பும்படி விமானிக்கு விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. ஆனால் 13-வது நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்து விட்டது.

இதனால் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டபோது அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது தெரிய வந்தது.

விமான விபத்து குறித்து விசாரணை நடத்திய இந்தோனேசிய விமான போக்குவரத்து துறை ‘லயன் ஏர்’ விமான நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் பணியாளர்களை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
Tags:    

Similar News