செய்திகள்

இலங்கை பாராளுமன்றம் விரைவில் கூடுகிறது- ராஜபக்சேயுடன் சம்பந்தன் சந்திப்பு

Published On 2018-10-30 07:27 GMT   |   Update On 2018-10-30 07:27 GMT
இலங்கையில் விரைவில் பாராளுமன்றம் கூட உள்ள நிலையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ராஜபக்சேவுடன் சம்பந்தன் முக்கிய ஆலோசனை நடத்தினார். #Rajapaksa #Sampanthan #SriLankanPolitics
கொழும்பு:

இலங்கையில் புதிய பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்று பணிகளை தொடங்கிவிட்ட போதிலும் அரசியல் குழப்பம் இன்னமும் தீரவில்லை.

“அரசியல் சாசனப்படி நான்தான் பிரதமர்” என்று ரனில் விக்ரமசிங்கே கூறி வருவதால் சிக்கல் நீடிக்கிறது.

பாராளுமன்றத்தை கூட்டுங்கள், நான் எனக்கு இருக்கும் மெஜாரிட்டியை நிரூபித்துக் காட்டுகிறேன் என்று ரனில் விக்ரமசிங்கே சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு கடிதமும் எழுதி உள்ளார்.

இதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை கூட்ட சபாநாயகர் முயற்சி செய்தார். ஆனால் அதிபர் சிறிசேனா தலையிட்டு பாராளுமன்றத்தை நவம்பர் 16-ந்தேதி வரை ஒத்திவைத்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கை பிரதமர் யார் என்ற சர்ச்சை நீடிப்பதால், பாராளுமன்றத்தை கூட்டி முடிவு செய்யுமாறு பல்வேறு நாடுகளும் அதிபர் சிறிசேனாவிடம் வலியுறுத்தியுள்ளன. நேற்று வெளிநாட்டு தூதர்கள் சந்திப்பின் போதும் பாராளுமன்றத்தை கூட்ட வலியுறுத்தப்பட்டது. இதனால் இலங்கை பாராளுமன்றம் விரைவில் கூட்டப்படும் என்று தெரிகிறது.

இது தொடர்பாக சபாநாயகர் ஜெயசூர்யா இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த கூட்டத்தில் இலங்கை பாராளுமன்றம் கூட்டப்படும் தேதி முடிவு செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

பாராளுமன்றம் விரைவில் கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ராஜபக்சேயும், ரனில் விக்ரமசிங்கேயும் எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். எம்.பி.க்களை பிடிப்பதற்காக அங்கு குதிரை பேரம் நடந்து வருகிறது.

ஒவ்வொரு எம்.பி.க்கும் சுமார் 300 மில்லியன் ரூபாய் முதல் சுமார் 500 மில்லியன் ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாக தெரிய வந்துள்ளது. இது தவிர எம்.பி.க்கள் கடத்தி செல்லப்படும் அபாயமும் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை பாராளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க 113 எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும். ராஜபக்சே- ரனில் விக்ரமசிங்கே இருவரும் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறி வருகிறார்கள்.

ராஜபக்சே-சிறிசேனா அணியினருக்கு 95 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களுக்கு மெஜாரிட்டியை பெற இன்னமும் 18 எம்.பி.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. ரனில் விக்ரமசிங்கே கட்சியில் உள்ள சுமார் 20 எம்.பி.க்களை ராஜபக்சே பேரம் பேசி வளைத்து இருப்பதாக கூறப்படுகிறது.


ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக 106 எம்.பி.க்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு மேலும் 7 எம்.பி.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில் 16 எம்.பி.க்களை வைத்துள்ள சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 எம்.பி.க்கள் ஆதரவு கிடைத்தால் மிக எளிதாக வெற்றி பெற முடியும் என்று ரனில் விக்ரமசிங்கே- ராஜபக்சே இருவரும் கருதுகிறார்கள். எனவே இரு தரப்பினரும் சம்பந்தனுடன் போட்டி போட்டு பேசி வருகிறார்கள்.

நேற்று முன்தினம் சம்பந்தன் தனது ஆதரவாளர்களுடன் சென்று சிறிசேனாவை சந்தித்தார். பிறகு ரனில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார். இன்று காலை அவர் ராஜபக்சேவை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு ராஜபக்சேவின் வீட்டில் நடந்தது. அப்போது அவர்கள் இருவரும் இலங்கை அரசியல் நிலைமை குறித்து விரிவாக பேசினார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 எம்.பி.க்களின் ஆதரவை தனக்கு தர வேண்டும் என்று சம்பந்தனிடம் ராஜபக்சே கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதில் அளித்த சம்பந்தன், “தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவேன் என்று நீங்கள் உறுதிமொழி தர வேண்டும். அந்த உறுதிமொழி எழுத்து மூலம் இருக்க வேண்டும். அப்படி தந்தால் மட்டுமே உங்களுக்கு ஆதரவு தருவதை பற்றி பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

முன்னதாக ரனில் விக்ரமசிங்கேயிடமும் சம்பந்தன் இதுபோன்று 2 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று மதியம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் கூட்டம் கொழும்பில் நடக்கிறது.

அந்த கூட்டத்தில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பது பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்ய உள்ளது. இந்த முடிவை அறிய இரு தரப்பு தலைவர்களும் ஆவலுடன் உள்ளனர்.

இதற்கிடையே கொழும்பில் இன்று மதியம் மிகப்பெரிய போராட்டங்கள் நடந்தன. பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வீடு முன்பும், ராஜபக்சே வீடு முன்பும் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு உள்ளனர்.

இதையடுத்து கொழும்பில் கலவரம் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. உளவுத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக பல்வேறு தகவல்களை அரசுக்கு அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க மக்கள் உஷாராக இருக்கும்படி வாஷிங்டனில் இருந்து எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. #Rajapaksa #Sampanthan #SriLankanPolitics
Tags:    

Similar News