செய்திகள்

மேலும் ஒரு ஊழல் வழக்கில் தீர்ப்பு- கலிதா ஜியாவுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை

Published On 2018-10-29 07:33 GMT   |   Update On 2018-10-29 07:33 GMT
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மீதான ஊழல் வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #KhaledaZia #KhaledaZiaGraftCase
டாக்கா:

வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கலிதா ஜியா தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது கணவரின் பெயரிலான அறக்கட்டளைக்கு நிதி சேர்த்ததாக கலிதா ஜியா மீது டாக்கா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கலிதா ஜியா (வயது 73), அவரது ஆட்சிக்காலத்தில் அரசியல் செயலாளராக இருந்த ஹாரிஸ் சவுத்தரி, ஹாரிஸ் சவுத்தரியின் தனிஉதவியாளர் ஜியாவுல் இஸ்லாம் முன்னா மற்றும் டாக்கா நகர முன்னாள் மேயர் சாதிக் உசேன் கோக்கா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

வங்காளதேச ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச தண்டனை இது என்பது குறிப்பிடத்தக்கது. #KhaledaZia #KhaledaZiaGraftCase 
Tags:    

Similar News