செய்திகள்

பெஷாவர் பள்ளி தாக்குதல் - பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம்

Published On 2018-10-01 00:52 GMT   |   Update On 2018-10-01 00:52 GMT
பெஷாவர் பள்ளி மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவின் ஆதரவு பெற்றவர்கள் எனும் பாகிஸ்தானின் அபாண்டமான குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #Peshawarschoolattack #UNGA
நியூயார்க் :

ஐ.நா. பொதுச்சபையின் 73-வது கூட்டம் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று முன்தினம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், கொலையாளிகளை புகழும் பாகிஸ்தானுடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும்? என்று கேள்வி விடுத்தார்.

அவரைத்தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரேசி, ‘பாகிஸ்தானின் பெஷாவரில் கடந்த 2014-ம் ஆண்டு பள்ளிக்கூடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் 150 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் இந்தியாவின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள். பெஷாவர் சம்பவத்திற்கு இந்தியா அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதற்கு இந்தியா தான் காரணம்’ என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.

பாகிஸ்தானின் இந்த அபாண்டமான குற்றச்சாட்டுக்கு ஐ.நா. சபைக்கான இந்திய செயலாளர் எனாம் காம்பீர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து ஐ.நா. சபையில் அவர் பேசியதாவது:-

பெஷாவர் நகரில் பள்ளிக்குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தின்போது, அந்நாட்டு துயரத்தில் இந்தியாவும் பங்கெடுத்தது. இதனை நான், பாகிஸ்தானின் புதிய அரசுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். இதற்காக எங்கள் நாட்டு (இந்தியா) நாடாளுமன்ற இருஅவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் பெஷாவர் தாக்குதலில் இறந்த குழந்தைகளுக்கான மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடுகிறோம் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. ஆனால், பயங்கரவாதிகள் என ஐ.நா. அறிவித்துள்ள 132 பயங்கரவாதிகளுக்கு அந்நாடு தான் அடைக்கலம் அளித்து வருகிறது. 22 தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்கிறது. இதனை பாகிஸ்தானால் மறுக்க முடியுமா?.

மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஹபீஸ் சயீது பாகிஸ்தானில் சுதந்திரமாக திரிகிறார். பயங்கரவாதத்தை கைவிட்டால், இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடக்கும். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை பாகிஸ்தானுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் பேசினார். #Peshawarschoolattack #UNGA
Tags:    

Similar News