செய்திகள்

மாலத்தீவு புதிய அதிபர் பதவியேற்பு விழா - பிரதமர் மோடிக்கு அழைப்பு

Published On 2018-09-28 00:36 GMT   |   Update On 2018-09-28 00:36 GMT
நடந்து முடிந்த மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது ஷோலியின் பதவியேற்பு விழாவிற்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #Maldives #PMModi
மாலி:

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் இருந்து நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட மாலத்தீவில் நடந்த அதிபர் தேர்தல் மிகவும் கவனிக்கப்பட்டது.  

மாலத் தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலத் தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது ஷோலியிடம் தோல்வியடைந்தார். இதனால், இப்ராகிம் முகமது ஷோலி மாலத்தீவின் புதிய அதிபராக வரும் நவம்பர் 17-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், மாலத்தீவு தேர்தலில் இப்ராகிம் முகமது ஷோலி வெற்றி பெற்ற பின்னர் பிரதமர் மோடி அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அப்போது தனது பதவியேற்பு விழாவிற்கு வருகை தருமாறு மோடிக்கு ஷோலி அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து இந்தியாவிற்கு வருமாறு ஷோலிக்கு மோடி அழைப்பு விடுத்தார் மோடியின் இந்த அழைப்பை ஷோலி ஏற்றுக்கொண்டார் என அவரது செய்திதொடர்பாளர் மரியா அகமது திதி கூறினார்.

மேலும், இந்தியா மாலத்தீவு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டனர் என மரியா தெரிவித்தார்.

சார்க் அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளிலேயே பிரதமர் மோடி இதுவரை செல்லாத நாடு மாலத்தீவுகள் மட்டும் தான். கடந்த 2015ம் ஆண்டு மாலத்தீவு செல்ல திட்டமிட்ட மோடியின் பயணம் அந்நாட்டின் உள்நாட்டு குழப்பம் காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடததக்கது. #Maldives #PMModi
Tags:    

Similar News