செய்திகள்

அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் - ஐநா கூட்டத்தில் சுஷ்மா வேண்டுகோள்

Published On 2018-09-25 05:07 GMT   |   Update On 2018-09-25 05:07 GMT
அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என ஐநா பொதுசபை கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டார். #SushmaSwaraj #UNGA
நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் ஐ.நா. பொதுச்சபையின் 73-வது கூட்டம் இன்று தொடங்கியது.

இதில் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றுள்ளார். அங்கு நெல்சன் மண்டேலா அமைதி உச்சிமாநாட்டில் பேசிய அவர், இந்தியாவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறினார். இந்திய அரசாங்கம் மண்டேலாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்கி கெளரவித்ததை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் காந்தியடிகளும், மண்டேலாவும் அமைதி வழியில் பொதுமக்கள் விடுதலைக்காக  போராடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.



பயங்கரவாதத்தால் ஏற்படும் பாதிப்புகளை விவரித்த அமைச்சர் சுஷ்மா, எந்த வகையிலும்  பயங்கரவாதத்தை ஆதரிக்கக் கூடாது, அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்று அவர்  கேட்டுக்கொண்டார். பயங்கரவாதம் மற்றும் வெறுப்புணர்வுக்கு எதிராக சர்வதேச தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு, நமது சந்ததியினருக்கு சிறந்த உலகை உருவாக்குவோம் என்றும் அவர் பேசினார்.

இந்த கூட்டம் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. #SushmaSwaraj #UNGA
Tags:    

Similar News