செய்திகள்

ஈரானில் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு : 24 பேர் பலி - தாக்குதல் நடத்திய 2 பேர் சுட்டுக்கொலை

Published On 2018-09-22 18:56 GMT   |   Update On 2018-09-22 18:56 GMT
ஈரானில் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கியால் சுட்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரர்கள் உள்பட 24 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
டெக்ரான்:

ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன், ஈரானை 1980-ம் ஆண்டு ஆக்கிரமித்தார். அதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் செப்டம்பர் 22-ந்தேதி இரு நாடுகள் இடையே போர் தொடங்கியது. 8 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நா. சபையின் முயற்சியால் போர் முடிவுக்கு வந்தாலும், இது 20-ம் நூற்றாண்டில் பேரழிவை சந்தித்த போர்களில் ஒன்றாக இன்றுவரை கருதப்படுகிறது.

அந்தப் போர் தொடங்கியதை நினைவுகூர்ந்து ஈரானில் முக்கிய நகரங்களில் நேற்று ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது.

அங்குள்ள அவாஸ் நகரில் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு ராணுவ அணிவகுப்பு தொடங்கியது. அதை பார்வையிட ஏராளமான பொதுமக்கள் கூடி இருந்தனர்.



இந்த நிலையில், அணிவகுப்பு மைதானம் அருகே உள்ள ஒரு பூங்காவில் இருந்து அணிவகுப்பில் கலந்து கொண்ட வீரர்களையும், பார்வையிட வந்திருந்த பொதுமக்களையும் குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுடப்பட்டது.

ராணுவ சீருடை அணிந்த 4 பயங்கரவாதிகள் ஒன்று சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தினர். துப்பாக்கிச்சூட்டால் ராணுவ அணிவகுப்பு சீர்குலைந்தது. பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதற்கிடையே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பூங்காவுக்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். அங்கே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்த பயங்கரவாதிகளை நோக்கி அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பயங்கரவாதிகள் குண்டுபாய்ந்து பலியாகினர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

4 பயங்கரவாதிகளும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் உயிரிழந்தனர். ஒரு குழந்தை, ஒரு பெண் உள்ளிட்ட 20 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு உடனடியாக ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  10 நிமிடங்களில் இந்த தாக்குதல் முடிவுக்கு வந்தது.

பலியான 24 பேரில் ஈரான் ராணுவ வீரர்கள்; பத்திரிகையாளர்; பொதுமக்களும் அடங்குவர் என தெரியவந்துள்ளது.

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு பற்றி ஈரான் ராணுவ செய்தி தொடர்பாளர் ரமேசான் ஷெரீப் நிருபர்களிடம் பேசுகையில், “துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் சவுதி அரேபியா ஆதரவு பெற்ற அல் அவாஸியா பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இப்படி ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவரை நடந்தது கிடையாது” என குறிப்பிட்டார்.

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இந்த அவாஸ் நகரில், வாழ்க்கைத்தரம் குறைந்து விட்டதாகக் கூறி அரசுக்கு எதிராக கடந்த ஓராண்டாக போராட்டங்கள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து ஈரான் வெளியுறவு மந்திரி முகமது ஜாவத் ஷெரீப் டுவிட்டரில் கருத்து தெரிவிக்கையில், “ ஒரு வெளிநாட்டு அரசால் பயங்கரவாதிகள் அமர்த்தப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு, ஆயுதங்கள் தந்து, கூலி கொடுத்து அவாஸ் நகரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று கூறி உள்ளார்.

மேலும், “இந்த தாக்குதலுக்கு ஈரான் விரைவாகவும், உறுதியாகவும் பதிலடி கொடுக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

Similar News