செய்திகள்

இந்து ஆலயங்களில் ஆடு, சேவல்களை பலியிட தடை - இலங்கையில் புதிய சட்டம் வருகிறது

Published On 2018-09-12 13:57 GMT   |   Update On 2018-09-12 13:57 GMT
இலங்கையில் உள்ள இந்து ஆலயங்களில் ஆடு, சேவல் போன்றவற்றை பலியிடுவதை தடை செய்யும் சட்டத்துக்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. #bananimal #Hindutemples #sirisena
கொழும்பு:

வேண்டுதல்கள் நிறைவேறும்போது ஆலயங்களில் ஆடு, சேவல் போன்றவற்றை பலியிட்டு பக்தர்களுக்கு விருந்து படைப்பது இந்து மக்களிடையே பாரம்பரிய பழக்கமாக இருந்து வருகிறது. இதுதவிர, திருவிழாக்களின்போது கிடா வெட்டுதல் போன்ற சம்பிரதாயங்கள் நடத்தப்படுகின்றன.

இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள கவுனவட்டே நரசிம்மர் ஆலயத்தில் ஆடு, சேவல் போன்றவற்றை பலியிடும் பழக்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணம் ஐகோர்ட்டில் சிலோன் இந்து மகாசபை என்ற அமைப்பு முன்னர் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன் கோயில்களில் உயிரினங்களை பலியிடும் பழக்கத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில்,  இலங்கையில் நாடு முழுவதும் உள்ள இந்து கோயில்களில் இத்தகைய பழக்கத்துக்கு தடை விதிக்கும் சட்ட முன்வரைவு ஒன்றை அந்நாட்டின் இந்து மத விவகாரங்கள் துறை மந்திரி டி.எம். சாமிநாதன் முன்மொழிந்திருந்தார்.

அந்த முன்மொழிவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான மந்திரிசபை இன்று வழிமொழிந்துள்ளது. அந்த முன்மொழிவில் கூறப்பட்டுள்ளதாவது.

விலங்குகள் மற்றும் பறவைகளை பலியிடும் பண்டைக்கால வழிபாட்டு முறைகளை அனைத்து தரப்பு இந்து மக்களும் ஏற்றுகொள்வதில்லை. பக்தர்களுக்கு மனரீதியாகவும், சுகாதாரரீதியாகவும் ஏற்படும் தீமைகளைப்பற்றி கவலைப்படாமல் கோயில் வளாகங்களில் ஆடு, கோழிகளை பலியிடும் இந்த  பழக்கத்துக்கு இந்து மதத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், இந்து அமைப்புகளும் ஒருமனதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த பழக்கத்துக்கு தடை விதித்து தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். 


அகிம்சை மற்றும் பிற உயிர்களுக்கு தீங்கிழைக்காமை என்பதுதான் பெரும்பாலான மதங்களின் கொள்கையாக உள்ளதாலும், இலங்கையில் வாழும் பெரும்பாலான மக்கள் இந்த கொள்கையை பின்பற்றி வருவதாலும் பாவச்செயலாக கருதி இந்த பழக்கத்துக்கு தடை விதிக்க வேண்டியுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட முன்வரைவு சட்டத்துறை அமைச்சகத்தின் இறுதி ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும். பின்னர், இலங்கை அரசின் தலைமை வழக்கறிஞரின் மூலம் அரசின் அறிவிக்கையாக வெளியாகி, பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டமாக அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #bananimal #Hindutemples #sirisena 
Tags:    

Similar News