செய்திகள்

அமெரிக்காவில் வங்கியில் மர்ம நபர் சுட்டதில் இந்தியர் பலி

Published On 2018-09-08 11:14 IST   |   Update On 2018-09-08 18:09:00 IST
அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி நகரில் உள்ள வங்கி ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இந்தியர் ஒருவர் பலியானார். #USBankShooting

நியூயார்க்:

அமெரிக்காவில் சின்சினாட்டி நகரில் பவுன் டெயன் சதுக்கத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான்.

இதில் பிரித்வி ராஜ் கான்டோ (25), ரிச்சர்ட் நியூகாமர் (64), லூயிஸ் பெலிப் கால்டெரான் (48) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் கொலையாளியுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். அதில் கொலையாளி உயிரிழந்தான். அவனது பெயர் ஓமர் சான்டா பெரேஷ் (29) என போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, துப்பாக்கி சூட்டில் பலியான 3 பேரில் பிரித்விராஜ் இந்தியர் என தெரிய வந்துள்ளது. இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள தெனாலியை சேர்ந்தவர்.

வேலூரில் உள்ள வி.ஐ.டி.யில் பி.டெக் முடித்தார். பின்னர் அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்.சி. படித்தார். சின்சினாட்டியில் துப்பாக்கி சூடு நடந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் பணி புரிந்து வந்தார்.

இவரது தந்தை கோபிநாத் விஜயவாடாவில் ஆந்திர மாநில வீட்டு வசதி வாரியத்தில் துணை செயற்பொறியாளராக பணிபுரிகிறார். தாயார் பெயர் சுதாராணி. குண்டூர் மாவட்டம் தெனாலியில் வசிக்கின்றனர். மனோக்னா என்ற தங்கை உள்ளார்.

இவர் கே.எல்.பல்கலைக் கழகத்தில் ‘பி.டெக்’ 3-வது ஆண்டு படித்து வருகிறார். பிரித்விராஜ் கொல்லப்பட்ட தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதற்காக அவர் சில மாதங்களில் இந்தியா திரும்ப இருந்தார். #USBankShooting

Tags:    

Similar News