செய்திகள்

தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளி லண்டன் கோர்ட் விசாரணையில் ஆஜர்

Published On 2018-08-28 11:50 GMT   |   Update On 2018-08-28 11:50 GMT
லண்டனில் கைது செய்யப்பட்ட தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளி இன்று வெஸ்ட்மின்ஸ்ட்டர் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜரானான். #DawoodIbrahim
லண்டன்:

1993-ம் ஆண்டில் முன்னூறுக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை தேடப்படும் பயங்கரவாதியாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

துபாயில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக நம்பப்படும் தாவூத் இப்ராஹிம் அங்கிருந்தவாறு கூட்டாளிகளையும், கூலிப்படையினரையும் வைத்து இந்தியாவில் ஆள்கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பது உள்ளிட்ட குற்றச்செயல்களை செய்து வருகிறான்.

மேலும், இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த துடிக்கும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவிகளை செய்து ஆதரித்து வருகிறான். நிழல் உலக வாழ்க்கையான தாதா தொழிலில் இன்றும் கொடிகட்டி பறந்து வரும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான், பிரிட்டன், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சில நாடுகளில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறான்.
 
இந்நிலையில், தாவூத் இப்ராகிமின் நிதி விவகாரங்களை கவனித்து வரும் ஜபிர் மோட்டிவாலா என்பவனை லண்டன் நகரில் உள்ள ஹில்டன் ஓட்டலில் கடந்த 19-ம் தேதி நியூ ஸ்காட்லாந்து யார்ட் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பாகிஸ்தான் நாட்டை பூர்விகமாக கொண்ட ஜபிர் மோட்டிவாலா பத்தாண்டு காலத்துக்கு பிரிட்டன் நாட்டு குடியுரிமை பெற்று லண்டனில் தங்கி வந்துள்ளான்.


தாவூத் இப்ராகிம் மட்டுமின்றி அவனது மனைவி மஹ்ஜபீன், மகன் மொயீன் நவாஸ், மகள்கள் மஹ்ரூக், மெஹ்ரீன், மாஸியா, மருமகன்கள் ஜுனைத், அவுரங்கசிப்  ஆகியோரின் வரவு-செலவு விவகாரங்களையும் ஜபிர் மோட்டிவாலா தான் கையாண்டு வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவனிடம்  போலீசார் நடத்தும் விசாரணையில் தாவூத் இப்ராகிமின் மொத்த சொத்துகள், முதலீடுகள் தொடர்பான விபரங்கள் மட்டுமின்றி இதர கூட்டாளிகள் பற்றிய ரகசியங்களும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணை காலம் முடிந்து, சிறையில் இருந்தவாறு ஜபிர் மோட்டிவாலாவை போலீசார் இன்று வீடியோ கான்பிரன்சிங் மூலம் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இன்றைய விசாரணையின்போது தனது பெயரை ஜபிர் சசிக் என்று மோட்டிவாலா தெரிவித்ததாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜபிர் மோட்டிவாலா சார்பில் இன்று ஜாமின் மனு ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை. அவன் மீதான வழக்கின் மறுவிசாரணை செப்டம்பர் மாதம் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகள் குறிப்பிட்டன. #DawoodIbrahim #JabirMoti #WestminsterCourt 
Tags:    

Similar News