செய்திகள்

ஜிம்பாப்வே அதிபராக எம்மர்சன் ம்நங்காக்வா மீண்டும் பதவி ஏற்றார்

Published On 2018-08-26 11:52 GMT   |   Update On 2018-08-26 11:52 GMT
தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாட்டின் அதிபராக எம்மர்சன் ம்நங்காக்வா இன்று மீண்டும் பதவி ஏற்று கொண்டார். #ZimConCourt #EmmersonMnangagwa
ஹராரே:

ஜிம்பாப்வே நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ராணுவ புரட்சியின் மூலம் அதிபர் ராபர்ட் முகாபே(94) பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இடைக்கால அதிபராக எம்மெர்சன் ம்நாங்காவா பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை பதவியில் அமர்த்துவது தொடர்பாக தெற்காப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவுடன் ஜிம்பாப்வே தற்காலிக அதிபர் எம்மெர்சன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து, ஜிம்பாப்வே அதிபர் பதவிக்கு கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதி நடைபெற்ற தேர்தலில்
தற்காலிக அதிபராக இருந்த எம்மர்சன் ம்நங்காக்வா-வை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் நெல்சன் சாமிசா போட்டியிட்டார். இந்த தேர்தலில் சுமார் 50 சதவீதம் வாக்குகளை பெற்ற எம்மர்சன் ம்நங்காக்வா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தல் முடிவை எதிர்த்து அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் நெல்சன் சாமிசாவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். வன்முறையாக மாறிய இந்த போராட்டத்தை அதிபர் எம்மர்சன் ம்நங்காக்வா இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வெடித்த மோதலில் கடந்த முதல் தேதி 6 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையில், எம்மர்சன் ம்நங்காக்வா வெற்றி பெற்றதாக வெளியான அறிவிப்பை எதிர்த்து அந்நாட்டு அரசியலமைப்பு சட்ட நீதிமன்றத்தில் நெல்சன் சாமிசா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எம்மர்சன் ம்நங்காக்வா வெற்றியை உறுதிப்படுத்தி கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.


இந்நிலையில், தலைநகர் ஹராரே நகரில் உள்ள தேசிய விளையாட்டு திடலில் ஜிம்பாப்வே அதிபராக எம்மர்சன் ம்நங்காக்வா இன்று மீண்டும் பதவி ஏற்றார். அந்நாட்டு உச்சநீதி மன்ற நீதிபதி லுக்கே மலாபா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவி ஏற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள், எம்மர்சனின் ஆதரவாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். #ZimConCourt #EmmersonMnangagwa
Tags:    

Similar News