செய்திகள்

செங்கடல் வழியாக கச்சா எண்ணைய் ஏற்றுமதியை தொடங்கியது சவுதி அரேபியா

Published On 2018-08-04 12:51 GMT   |   Update On 2018-08-04 12:51 GMT
கப்பல்களை வழிமறித்து போராளிகள் தாக்குவதால் நிறுத்தி வைக்கப்பட்ட கச்சா எண்ணைய் ஏற்றுமதியை செங்கடல் வழியாக சவுதி அரேபியா மீண்டும் தொடங்கியுள்ளது. #Saudioilexportsresumes #Saudioilexports #RedSealane
ரியாத்:

ஏமன் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான அரசுக்கு சவுதி அரேபியா ஆதரவு அளித்து வருகிறது. அவரை ஆட்சியில் இருந்து அகற்றும் ஹவுத்தி போராளிகள் அரசுப் படைகளுக்கு எதிராக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசுப் படைகளுடன் கைகோர்த்துள்ள நேசநாடான சவுதி அரேபியா இந்த போராளிகளை ஒடுக்க தேவையான ராணுவ உதவிகளை செய்து வருகிறது. இதனால், சவுதி அரேபியாவை ஹவுத்தி போராளிகள் தங்களது பரம எதிரியாக கருதுகின்றனர்.

ஏமன் நாட்டை மையமாக கொண்டு சவுதி அரேபியாவின் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்திவரும் ஹவுத்தி போராளிகள் குழுவுக்கு சவுதி அரேபியாவின் பகை நாடான ஈரான் மறைமுகமாக பணம் மற்றும் அதிநவீன ஆயுதங்களை அளித்து வருகிறது.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிசென்ற இரு பெரிய எண்ணெய் கப்பல்கள் மீது மீது ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த மாதம் 25-ம் தேதி தாக்குதல் நடத்தி அழித்தனர். இதையடுத்து எண்ணெய் கப்பல் போக்குவரத்தை சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. 

அமைதி பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கும் வகையில் சவுதி எண்ணைய் கப்பல்கள் மீது நடத்தும் தாக்குதல்களை இருவார காலத்துக்கு தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளதாக ஹவுத்தி போராளிகள் கடந்த 31-ம் தேதி அறிவித்திருந்தனர்.

கச்சா எண்ணைய் ஏற்றுமதியை மட்டுமே பிரதான வருமான நம்பி இருக்கும் சவுதி அரேபியா தற்போது செங்கடல் பகுதியில் உள்ள பாப் அல்-மன்டேப் ஜலசந்தி வழியாக இன்றிலிருந்து கப்பல்கள் மூலம் கச்சா எண்ணைய் ஏற்றுமதியை தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி துறை மந்திரி காலித் அல்-ஃபலிஹ் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Saudioilexportsresumes #Saudioilexports #RedSealane
Tags:    

Similar News